ஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்

சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய Pixels என்கிற படம் Pac man, Donky Kong ஆகிய ஆர்கேட் கேம்ஸ்சை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் காலத்தில் பிரபலமான இந்த கேம்ஸ்களில் வரும் கதாப்பாத்திரங்கள் பார்க்க சிறிய சிறிய பெட்டிகள் போலத் தென்படும், இதற்குக் காரணம் இந்த கேம்ஸ்களின் குறைந்த பிக்ஸல் (pixel) எண்ணிக்கை ஆகும்.

பிக்ஸல் (படவணு) எனபடுவது “picture elements” அல்லது படத்தின் அடிப்படைக் கூறுகள் எனலாம். இச்சிறிய நிறப் புள்ளிகளே உங்கள் கணணித் திரை, ஸ்மார்ட்போன் மற்றும் டிவியில் வரும் படங்களை தோற்றுவிக்கின்றன.

ஒரு படத்தை உருவாக்கத் தேவையான மொத்த பிக்ஸல்கள் தெளிவுத்திறன் (resolution) எனப்படுகிறது. அதிக பிக்ஸல்கள் என்றால் அதிக தெளிவுத்திறன் எனவே தரம் கூடிய படம், குறைந்தளவு பிக்ஸல்கள் என்றால் குறைவான தெளிவுத்திறன், எனவே தரம் குறைந்த மங்கலான, நிறங்கள் மறைந்த படங்களாக அவை இருக்கும்.

தொழில்நுட்ப வரலாற்றில் எப்படி தெளிவுத்திறன் அதிகரித்துக்கொண்டு வந்துள்ளது என்று நோக்கினால், முதலாவது Pac man கேம்ம்மின் தெளிவுத்திறன் வெறும் 64,000 பிக்ஸல்கள் தான், ஆனால் இன்றைய ஸ்மார்ட்போன் திரை 40 மில்லியன் பிக்ஸல் தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனையும் தாண்டி மிகத் தெளிவான படங்களுக்கு நீங்கள் விண்ணியல் பக்கம் பார்க்கவேண்டியிருக்கும்.

விண்ணியலாளர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் மிக மிகத் தொலைவில் இருப்பதும், மங்கலான பொருட்களையும் பற்றி ஆய்வுகளை செய்கின்றனர். இவை வெறும் கண்களுக்கு புலப்படாதலவிற்கு மங்கலானவை. மிகத் தெளிவான இருண்ட இரவில், மிகத் துல்லியமான, திறன்வாய்ந்த காமெராக்கள் மூலமே இவற்றைப் பார்க்கமுடியும்.

படத்தில்: டிரையாங்குலம் பேரடை, 54 தனிப்பட்ட படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி: NASA, ESA, and M. Durbin, J. Dalcanton, and B. F. Williams (University of Washington)

மேலே உள்ள படம் ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. இது எமக்கு அருகில் இருக்கும் 40 பில்லியன் விண்மீன்களைக் கொண்ட மிகப்பெரிய சுருள் விண்மீன் பேரடை ஒன்றின் படம். இந்த விண்மீன் பேரடையின் மையப்பகுதியையும், அதன் சுருள் கரங்களையும் துல்லியமாகக் காட்டும் முழுப்படத்தையும் எடுப்பதற்கு ஹபிள் 54 தனித்தனி படங்களை எடுத்து ஒட்டவேண்டியதாகிற்று. அந்தளவிற்கு இந்த விண்மீன் பேரடை பெரிது.

ஆனால், இந்த படத்தில் இருக்கும் சிறப்பான அம்சம் அதன் தெளிவுத்திறன் தான். இந்தப் புகைப்படம் 665 மில்லியன் பிக்ஸலால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தப் படத்தில் எம்மால் 10 தொடக்கம் 15 மில்லியன் விண்மீன்களை தனித்தனியாக இனங்காணக்கூடியதாக இருக்கிறது. உண்மையிலேயே இது ஒரு சிறப்பான புதுவருட தீர்மானம் (resolution) தான்!

மேலதிக தகவல்

மிகச் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் கமராக்கள் 48 மில்லியன் பிக்ஸல் தெளிவுத்திறன் வரை செல்லும் அதேவேளை டிஜிடல் கமராக்களில் அதிகூடியதாக 150 மில்லியன் பிக்ஸல் தெளிவுத்திறன் கொண்ட கமராக்கள் உண்டு.


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam