விண்மீன்கள் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. பிரபஞ்ச அடுப்புகள் என்று அவற்றை நாம் கருதுவது தவறே இல்லை. மனிதனைப் போன்ற உயிரினங்கள் உருவாகக் காரணமான கார்பன், ஆக்சிஜன் போன்ற மூலகங்கள் இந்த விண்மீன்களின் மூலமே பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்பட்டன.
உயிரினங்களை உருவாக்கக் காரணமான இந்த விண்மீன்களின் வாழ்கையும் உயிரினங்கள் போன்றே சிக்கலானது. சடப்பொருட்களைப் போல இருந்தது, இல்லாமல் போனது என்று விண்மீன்களின் வாழ்க்கையில்லை. ஒவ்வொரு விண்மீனின் வாழ்கையும் அதன் அளவு, திணிவு என்று பல காரணிகளால் வேறுபடுகிறது. சில விண்மீன்கள் தங்கள் எரிபொருளை முடித்துவிட்டு கப்சிப் என்று அடங்கிவிடும், சில விண்மீன்கள் பிரபஞ்சம் அறிந்த மிகப்பெரிய வெடிப்பான சுப்பர்நோவா வெடிப்பாக வெடித்துச் சிதறும்!
இதில் நமது சூரியனின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறது என்று நாம் சிந்திக்கிறோம். பால்யவயதுள்ள சூரியன் இன்னும் ஐந்து தொடக்கம் பத்து பில்லியன் வருடங்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனாலும் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று எம்மால் எதிர்வுகூறக் கூடியதாக இருக்கும். சுப்பர்நோவாவாக வெடிக்கும் அளவிற்கு சூரியன் ஒன்றும் அவ்வளவு திணிவு கொண்ட விண்மீன் அல்ல. எனவே தனது ஹைட்ரோஜன் எரிபொருளை முடித்துவிட்டு ஹீலியத்தை எரிக்கும் போது சூரியனின் வெளிப்பகுதி/வளிமண்டலம் விரிவடைந்துவிட நடுவில் சூரியனின் மையப்பகுதி வெள்ளைக்குள்ளன் எனும் வகை விண்மீனாக மாறிவிடும்.
இந்த வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்கள் மிக மிக அடர்த்தியானவை. சூரியன் அளவு திணிவை பூமியளவு சுருக்கினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! அதே அளவுதான் இந்த வெள்ளைக்குள்ளனும். நமது சூரியன் வெள்ளைக்குள்ளனாக மாறினால் பூமியளவே இருக்கும். இதன் 1 cm3 சுமார் 10 டன் நிறை இருக்கும்.
வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களின் மிக மெல்லிய பிரகாசம் அதன் வெப்ப சக்தியில் இருந்து வருகிறது. விண்மீன்களில் இடம்பெறுவது போன்று அணுக்கரு இணைவு இடம்பெற்று சக்தி வெளிவருவதில்லை.
எனவே நமது சூரியனின் விதியும் இதுதான். இது நீண்டகாலமாகவே எமக்கு தெரிந்ததுதான். ஆனால் தற்போதைய அவதானிப்பு முடிவுகள் புதிய விடையம் ஒன்றை இதில் சேர்த்துள்ளது. அதாவது, வெள்ளைக்குள்ளனாகும் விண்மீன்கள் கிறிஸ்டலாக மாறுகின்றன என்பதே அது.
பொதுவாக வெள்ளைக்குள்ளனின் உள்ளே கார்பன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் கருக்கள் காணப்படும். இங்கே இலத்திரன்கள் சுயாதீனமாக அசைந்துகொண்டிருக்கும். இவை உள்ளே இருக்கும் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்புறம் நோக்கி கொண்டுவரும்.
சுமார் 10 மில்லியன் பாகை வெப்பநிலையில் வெள்ளைக்குள்ளனின் உள்ளே இருக்கும் நேர் ஏற்றம் கொண்ட அணுக்கருக்கள் சுயாதீனமாக அசையக்கூடிய அளவிற்கு சக்தியைக் கொண்டிராது. எனவே அவை இருக்கும் இடத்திலேயே ‘பிடித்துவைத்த பிள்ளையார்’ போல அமர்ந்துவிடும். இந்த நிகழ்வின் போது பெருமளவு சக்தி வெளிவரும். இப்படி அசையாமல் நிலையாக இருக்கும் அணுக்கருக்களே தின்ம கிறிஸ்டல் அமைப்பாகும்.
வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்கள் இப்படிக் கிறிஸ்டல் கல்லாக மாறுவதும் அதன் அளவுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் பூமிக்கு அருகில் 300 ஒளியாண்டுகள் சுற்றளவில் இருக்கும் வெள்ளைக்குள்ளன் எனக் கருத வாய்ப்புள்ள 15,000 விண்பொருட்களை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
எல்லா வெள்ளைக்குள்ளன் விண்மீன்களும் கல்லாக மாறும், ஆனால் திணிவு அதிகமான வெள்ளைக்குள்ளன்கள் வேகமாக கல்லாக மாறுகின்றன என்பது இந்த ஆய்வில் இருந்து தெரியவருகிறது.
எனவே, நமது பால்வீதியில் இருக்கும் அநேக விண்பொருட்கள் கிறிஸ்டல் உருண்டைகள்தான்! அந்த உருண்டைகளில் ஒன்றாக ஒரு காலத்தில் நம் சூரியனும் மாறிவிடும்.
சுவாரஸ்யமான தகவல்கள்
பூமிக்கு மிக அருகில் இருக்கும் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் Sirius B. இது அண்ணளவாக 8.6 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.
#parimaanam #sciencepanda
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam