நேற்று (27/12/2018) ஜொகான்னஸ் கெப்லரின் 447 ஆவது பிறந்த தினம். விண்ணியலில் மறக்கமுடியா ஒரு பெயர் கெப்லர். வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படும் இவர் கோள்களின் இயக்கவிதிகள் பற்றி ஆய்வு செய்துள்ளார். இன்று முக்கியமான மூன்று கோள்களின் இயக்கவிதிகள், ‘கெப்லரின் இயக்கவிதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. பிறவிண்மீன் கோள்களை தேடும் நாசாவின் விண்கலத்திற்கும் கெப்லர் திட்டம் என்றே பெயரிட்டுள்ளனர்.

ஜொகான்னஸ் கெப்லர் (Johannes Kepler) டிசம்பர் 27, 1571 இல் பிறந்த ஜேர்மனிய விண்ணியலாளர், கணிதவியலாளர் மற்றும் சோதிடர் என பல முகங்களைக் கொண்டவர்! 17ம் நூற்றாண்டின் விஞ்ஞானப் புரட்சியில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலே கூறியது போல கோள்களைப் பற்றியும் அவற்றின் இயக்கமுறைகள் பற்றியும் முதன்முதலில் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை செய்தவர் இவர்தான்.

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் முதன்முதலில் அறிவித்த சூரியனை மையமாகக் கொண்ட சூரியத் தொகுதி, அதாவது சூரியன் + கோள்கள் உள்ளடங்கிய தொகுதியின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், அதனைச் சுற்றியே கோள்கள் வலம்வருவதாகவும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கருதுகோளை வெளியிட்டார். ஆனால் அவரது மாதிரியில் சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் வட்டவடிவில் சுற்றிவந்தன.

அக்காலத்தில் இது ஒரு முரண்பட்ட கருத்தாக இருந்தது. காரணம் அக்காலத்தில் பூமியை மையமாகக் கொண்டே சூரிய சந்திரன் உட்பட ஏனைய கோள்கள் வலம்வருகின்றன என்கிற கோட்பாட்டை ஆட்சி அதிகாரத்தில் இருந்த அல்லது ஆட்சியில் செல்வாக்குச் செலுத்திய சமையச் சபைகள் ஏற்றுக்கொண்டிருந்தன. இதற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டனர்.

எப்படியிருந்தும், நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தொடங்கிவைத்த ‘கோப்பர்னிக்கஸ் புரட்சி’ வெற்றிகரமாக சமையவாதிகளின் பிடியில் இருந்து விஞ்ஞானத்தை மீட்டெடுத்தது எனலாம்.

கோப்பர்னிக்கஸ் முன்வைத்த சூரியனை மையமாகக்கொண்ட சூரியத்தொகுதிக் கோட்பாட்டை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு கெப்லர் தனது ஆய்வை முன்னெடுத்தார்.

கோப்பர்னிக்கஸ் கூறிய கருத்தில் இருந்த்யு பின்வரும் கருதுகோள்களை சரியெனக் கருதினார் கெப்லர்.

  1. கோள்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
  2. சூரியன் கோள்களின் மையத்தில் இருக்கிறது.
  3. கோள்கள் சூரியனைச் சுற்றிப் பயணிக்கும் வேகம் மாறிலி.

அந்தக் கருதுகோள்களில் இருந்து தொடங்கி நிறைய அவதானிப்புகள், வேறு பலர் அவதானித்த குறிப்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவர் உருவாகிய கணித மாதிரியில் (mathametical model) இருந்து வெளிப்படையான பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்.

  1. கோள்கள் வட்டப்பாதையில் சுற்றவில்லை, மாறாக நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
  2. சூரியன் மையத்தில் இல்லை, மாறாக நீள்வட்டப் பாதையில் ஒரு குவியப் புள்ளியில் இருக்கிறது.
  3. கோள்களின் நேர்கோட்டு வேகமோ, அல்லது திசை வேகமோ மாறிலி அல்ல.

கெப்லரின் விதிகள்

டைக்கோ பிராகி எனும் டேனிய வானியலாளரின் அவதானிப்புக் குறிப்புகளைக் கொண்டு கோள்களின் இயக்கம் பற்றி எந்தவொரு நேரடி தொலைநோக்கி அவதானிப்புகளும் இன்றி மூன்று விதிகளை கெப்லர் உருவாக்கினார்.

  1. சுற்றுகைக்கான விதி – எல்லாக் கோள்களும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன. சூரியன் நீள்வட்டப் பாதையின் ஒரு குவிய மையத்தில் இருகின்றது.
  2. இடத்திற்காக விதி – சூரியனையும் கோள் ஒன்றையும் இணைக்கும் கோடு, சம காலத்தில் சம பரப்பை தடவிச் செல்லும்.
  3. காலத்திற்கான விதி – ஒரு கோளின் சுற்றுகைக்காலத்திற்கான வர்க்கம் (square) அதன் நீள்வட்டப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) அளவின் கணத்திற்கு (cube) நேர்விகித சமனாகும்.

1609 இல் கெப்லர் தனது முதவாது, மற்றும் இரண்டாவது விதிகளை பிரசுரித்தார். பின்னர் 1619 இல் மூன்றாவது விதியையும் பிரசுரித்தார்.

இவரது கோள்களின் இயக்கம் பற்றிய கோட்பாடுகள் அவர் பின்னே தடம் பிடித்து வந்த சார் ஐசாக் நியுட்டன் போன்ற மாபெரும் கணித மேதைகள் / இயற்பியலாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது எனலாம்.

கலிலியோ கலிலி தான் விஞ்ஞானத்தின், அவதானிப்பு விண்ணியலின் தந்தை என்று நாம் கருதுகிறோம், ஆனால் விண்ணியல் போன்ற மாபெரும் விஞ்ஞானத் துறைக்கு ஒரு தந்தை மட்டுமே இருக்கவேண்டியதில்லை. நிச்சயம் விண்ணியலின் பாதையில் கணித மாதிரிகளை நுழைத்து விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஜொகான்னஸ் கெப்லருக்கு உண்டு!


#parimaanam #sciencepanda
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam

Previous articleவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று!
Next articleசூரியனின் விதி