வெளிக்காற்றை விட வீட்டினுள் குறிப்பாக பிளாட் போன்ற காற்றுப்போக்கு அதிகமில்லாத வீடுகளின் உள்ளே காணப்படும் காற்று அதிகளவில் மாடசைந்திருப்பது மட்டுமின்றி, அதில் போமல்டிஹைத் தொடக்கம் குலோரோபோம் வரை நச்சுத்தன்மையான வஸ்துக்களும் கலந்தே இருக்கும்.
வீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றக்கூடியது என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், இந்தத் தாவரங்கள் அவ்வளவு வினைத்திரனானவை அல்ல. ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் இரண்டு பெரிய வீட்டுத்தாவரங்கள் இருந்தால்த்தான் ஒப்பீட்டளவில் நச்சுத் தன்மையைக் குறைக்கக்கூடிய சாத்தியம் உருவாகும்.
தாவரங்களின் வினைத்திறனை அதிகரிக்க விஞ்ஞானிகள் புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, பாலூட்டிகளில் இருக்கும் CYP2E1 எனும் ஜீன் பெரும்பாலான நச்சுப் பதார்த்தங்களை உடைக்கும் சக்திகொண்ட நொதியத்தைக் (enzyme) கொண்டுள்ளது. இந்த ஜீனைப் பயன்படுத்தி பென்சேன் மற்றும் குலோரோபோம் போன்ற நஞ்சுகளை எளிதாக நீக்கிவிடமுடியும்.
முயலில் இருந்து பிரித்தெடுத்த CYP2E1 ஜீனை தாவரத்தின் ஜினோமுடன் சேர்த்து புதிய தாவரம் ஒன்றை உருவாக்கி அதனை மூடிய இடத்தில் வைத்தனர். அதன் பின்னர் பென்சேன் அல்லது குலோரோபோம் வாயுவை இந்த மூடிய இடத்தில் செலுத்தினர். அதேபோல முயலின் ஜீன் சேர்க்காத தாவரம், தாவரமே இல்லாத இடம் என வேறு இரண்டு இடங்களிலும் இதே பரிசோதனை செய்யப்பட்டது.
மூன்று நாட்களின் பின்னர் அவதானித்தபோது, முயலின் ஜீன் சேர்க்கப்பட்ட தாவரம் இருந்த இடத்தில் நச்சு வாயுவின் அளவு பெரிதும் குறைந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எட்டு நாட்களின் பின்னர் குலோரோபோம் இருந்த சுவடே இல்லாதளவிற்கு அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டது முயல் ஜீன் சேர்க்கப்பட்ட தாவரம்!
இப்படியான நச்சுப் பதார்த்தங்களை வீட்டு காற்றில் இருந்து அகற்ற கருவிகள் விற்பனைக்கு இருந்தாலும், இது முற்றிலும் இயற்கையான முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த முறை எந்தளவிற்கு பொருளாதார ரீதியாக சாத்தியப்படும் என்று தற்போதைக்கு கூறமுடியாது.
ஆனாலும் முயலின் DNA வைக்கொண்டு வீட்டுக்காற்றை சுத்தப்படுத்துவது என்பது சயின்ஸ்பிக்ஸன் போல இருக்கிறதல்லவா?
நன்றி: sciencealert, futurism
parimaanam #sciencepanda
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam