பேருவில் 500 வருடங்களுக்கு முந்திய 140 சிறுவர்களின் சடங்குக் கொலை

அண்மையில் இடம்பெற்ற அகழ்வாய்வில் பேரு நாட்டின் வடக்குப் பகுதியில் 140 இற்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் 200 இளம் இலாமா வகை ஒட்டகக்குட்டிகள் உள்ளடங்கிய புதை குழியை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். 550 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சமையச் சடங்கில் இந்தப் பலி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அகழ்வாய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்து.

ஆஸ்டெக் (Aztec), மாயா (Maya) மற்றும் இங்கா (Inca) ஆகிய நாகரீகங்களில் சடங்குக்காக இடம்பெறும் மனிதப் பலி வழமையானது என்பதை நாமறிந்திருந்தாலும், கொலம்பிய நாகரீகத்திற்கு முந்திய காலப்பகுதியில் இருந்த சிமு நாகரீகத்தில் இவ்வளவு பெரிய பலி கொடுக்கப்பட்டிருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

குழந்தைகள் பலி கொடுக்கப்பட்ட இடம் கடலில் இருந்து வெறும் 1000 அடி தொலைவில் இருக்கிறது. சிமு நாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் அண்ணளவாக பேரு நாட்டின் பசுபிக் சமுத்திர கரையோரமாக 600 மைல் நீளமான பிரதேசம் சிமு கட்டுப்பாட்டினுள் இருந்தது. கொலம்பிய நாகரீகத்திற்கு முந்தைய காலத்தில் இங்கா நாகரீகம் மட்டுந்தான் சிமு நாகரீகத்தை விட பெரியதாக இருந்தது. கி.பி 1475 அளவில் இங்கா மற்றும் சிமு ஆகிய நாகரீகங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சிமு முழுதாக அழிந்தது என்பது வரலாறு.

இந்தப் பலி கொடுக்கும் இடம் முதலில் 2011 இல் கண்டறியப்பட்டது. 3500 வருடம் பழமையான கோவில் ஒன்றை தேடப்போய், அங்கே உதவ வந்த மக்கள் கடலிற்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் தென்படுவதை அவதானித்து அப்போதே 42 சிறுவர்களின் உடல்கள் மற்றும் 76 இலாமா குட்டிகளின் உடல்கள் கண்டறியப்பட்டன. அதன் பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான அகழ்வாய்வு 2016 இல் முடிவுக்கு வந்தபோது 140 சிறுவர்கள், 200 இலாமா குட்டிகளின் எலும்புகள் கண்டறியப்பட்டன.

இந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட கயிறுகள், உடல்களை போர்த்தியிருந்த துணிகளை கார்பன் நாட்கணிப்பிற்கு உட்படுத்தியபோது இவை கி.பி 1400 தொடக்கம் கி.பி 1450 வரையான காலப்பகுதியைச் சார்ந்தவை என அறியமுடிகிறது.

இந்தச் சிறுவர்களின் எலும்புகளை ஆய்வு செய்தபோது, நெஞ்சுப் பிரதேசத்தில் இருந்து வயிறுவரை வெட்டப்பட்டு, நெஞ்சு பிளக்கப்பட்டு அவர்களின் இதயம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது என்கிற முடிவிற்கு ஆய்வாளர்கள் வருகின்றனர்.

இந்தப் பலி கொடுக்கப்பட்ட பிரதேசத்திற்கு மிக அருகில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் என வளர்ந்த மூவரின் சடலங்களும் கிடைத்துள்ளன. இவர்கள் மூவரும் தலையில் பலமாக தாக்கப்பட்ட சுவடுகள் இருக்கின்றன. இவர்களும் இந்த பலி கொடுக்கும் நிகழ்வில் பங்கு கொண்டிருக்கலாம் என்பதும் அனுமானம்தான்.

இந்த 140 சிறுவர்களின் வயது 5 தொடக்கம் 14 வரை காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான சிறுவர்கள் மேற்கு திசை நோக்கியவாறு புதைக்கப்பட்டுள்ளனர். அதாவது கடலைப் பார்த்தவாறு. புதைக்கப்பட்ட இலாமா குட்டிகள் கிழக்கைப் பார்த்தவாறு புதைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 மாதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

இந்தக் கொடூர நிகழ்வு இடம்பெற்ற காலத்தில் இந்த இடமே சேற்றுக் களியால் நிரம்பியிருந்ததால், கால்த்தடங்கள், மற்றும் பல அடையாளங்கள் அப்படியே இன்றும் நிலத்திற்குக் கீழே பதிந்திருக்கிறது. இதிலிருந்து ஆய்வாளர்கள் எப்படி இந்த சடங்கு இடம் பெற்றிருக்கலாம் என்று ஒரு ஐடியாவிற்கு வருகின்றனர்.

இந்த சடங்குப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்து சிறுவர்களும், இலாமாக்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. மையப்பகுதியில் இவர்களை அனைவரும் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் அப்படியே சேற்றுநிலத்தில் விடப்பட்டுள்ளன.

ஏன் இவ்வளவு பெரிய பலிச்சடங்கு?

இப்படி ஒரு பாரிய அளவில் ஏன் சடங்கு செய்யப்படவேண்டும் என்கிற கேள்வி எல்லோருக்கும் ஏற்ற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையம்தான். இந்த இடத்தை அகழ்வாய்வு செய்யும் போதும், இது சம்பந்தமாக கண்டுபிடிப்புக்களை ஆராய்ச்சி முடிவுகளாக வெளியிடும் போதும் பலரும் இப்படியான கேள்வியை இந்த ஆய்வாளர்களிடம் முன்வைத்துள்ளனர்.

மனித வரலாற்றில் நாம் இதுவரை அறிந்த மிகப்பெரிய சிறுவர் பலிச்சடங்கு இந்த நிகழ்வுதான். இதற்கு முன்னர் ஆஸ்டெக் நாகரீகத்தில் 42 சிறுவர்கள் பலியிடப்பட்டிருந்ததை நாம் கண்டறிந்துள்ளோம். ஆனால் இது அதனைவிடப் பெரியது.

அதிலும் இன்னொரு விடையம், வேறு பல அகழ்வாய்வு நிபுணர்கள், இந்த 140 சடலங்களும் ஒரே காலத்தவையா இல்லை சில தசாப்தங்கள் தொடக்கம் நூற்றாண்டு வரை பல்வேறு காலங்களில் பலி கொடுக்கப்பட்டவையா என்றும் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால், இந்த இடத்தின் தலைமை ஆய்வாளர் இப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் கிடைப்பது மிக மிக அரிது என்றே கூறுகிறார். மேலும், இங்கே கிடைக்கும் எலும்புகளில் இருக்கும் ஒரே விதமான வெட்டுக்கள், மற்றும் பிழையில்லாத நுணுக்கத்துடன் கூடிய பிளவுகள் என்பன இப்படியான பலி பலி கொடுக்கும் நிகழ்வுகளில் மிகுந்த பரீட்சியம் கொண்ட சிலரால் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தெரிகிறது.

எனவே இது நிச்சயம் ஒரு சடங்குப் பலி தான் என்று இதன் ஆய்வாளர்கள் முடிவுக்கு வருகின்றனர்.

இந்தப் பாரிய பலிக்கு காரணம், எல்நினோ எனும் காலநிலை மாற்றமாக இருக்கலாம். இந்தக் காலத்தில் கடலோரத்தில் வாழ்ந்த சிமு நாகரீகம் பாரிய அழிவைச் சந்தித்திருக்கும். தொடர்ச்சியான மழை, வெள்ளப்பெருக்கு என்று அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பிழைப்பதற்கான சாத்தியக்கூறே ஊசலாடியிருக்கும். இதற்கெல்லாம் காரணம் கடவுளின் சாபம் என நினைத்து, தங்கள் கடவுளுக்கு ஒரு பாரிய பலி பூசை செய்து கடவுளை மகிழ்ச்சிப்படுத்த இந்த பலி இடம்பெற்றிருக்க வேண்டும்.

இன்னொரு முக்கிய விடையம், இந்த நிகழ்வு நடந்து சில தசாப்தங்களிலேயே இங்கா நாகரீகம் வெற்றிகரமாக படையெடுத்து மொத்த சிமு நாகரீகத்தையும் அழித்தது வரலாறு.

இதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் வேறு பல சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட இடங்களை அகழ்வாய்வு செய்த மானுடவியல் ப்ரொபசர் ஹாகேன் கிலாவுஸ், சிறுவர்களை அவ்வளவு எளிதில் பலி கொடுப்பதில்லை. எல்நினோவின் தொடர்ச்சியான தாக்குதல், வயதுவந்தவர்களின் பலி போதாது என்கிற முடிவுக்கு இந்த நாகரீகத்தின் மதகுருக்களுக்கு வந்திருக்கவேண்டும் என்கிறார்.

எப்படியோ ஒரு டைம் மெஷின் இல்லாது உண்மையில் என்ன இடம்பெற்றிருக்கவேண்டும் என்று எம்மால் உறுதியாக கூறிவிடமுடியாது தான்.

இந்த அகழ்வாய்வு National Geographic Society யால் நிதியுதவில் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

தகவல்: National Geographic, படங்கள்: GABRIEL PRIETO


parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam