வியாழனில் ஒரு சூரியகிரகணம்

பூமியில் சூரியகிரகணம் என்பது நமக்கு எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விடையம்தான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடப்பதால், பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் விழும். இந்தப் பகுதிக்குள் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பது போல இருக்கும்.

துணைக்கோள்களை கொண்ட கோள்களில் சூரியகிரகணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, சூரியனுக்கும் குறித்த கோளிற்கும் இடையில் அதன் துணைக்கோள் கடந்தால் அது சூரிய கிராகணமே.

வியாழனுக்கு பல துணைக்கோள்கள் இருப்பதால் அங்கே சூரிய கிரகணம் வருவது சாதாரணம். ஆனால் நாம் அதனை அவதானிப்பது என்பது அரிதான நிகழ்வு.

வியாழனையும் அதன் துணைக்கோள்களையும் ஆய்வு செய்ய நாசா அனுப்பிய ஜூனோ விண்கலம் வியாழனின் துணைக்கோள் ஐயோ (Io) சூரியனுக்கும் வியாளனுக்கும் இடையில் கடந்ததால் உருவான சூரியகிரகணம் காரணமாக விழுந்த நிழலை அழகாக படம்பிடித்துள்ளது. கீழே உள்ள படத்தில் வியாழனின் அழகான மேகக் கீற்றுக்களுக்கு இடையில் தென்படும் கருமை நிற நிழலைக் காணலாம்.

ஐயோ வெறும் 1.77 நாட்களின் வியாழனை சுற்றிவந்துவிடும்.

வியாழனில் நாம் அவதானித்த முதலாவது சூரியகிரகணம் இதுவல்ல. கபிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் நாம் 2004 இல் வியாழனின் மூன்று துணைக்கோள்கள் சேர்ந்து உருவாக்கிய சூரியகிரகணத்தை படம்பிடித்துள்ளோம். கீழே படத்தில் இருக்கும் மூன்று கருமை நிறப் புள்ளிகளும், வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்களான ஐயோ, கணிமேட், களிஸ்ட்ரோ ஆகியவற்றின் நிழல்கள்.

அதேவேளை, ஐயோ வெள்ளை நிறப் புள்ளியாகவும், கணிமேட் நீல நிறப் புள்ளியாகவும் தெரிகின்றது.

படவுதவி: NASA, ESA, and E. Karkoschka (University of Arizona)