சனியின் துணைக்கோள் என்சிலாடஸிசில் உயிரின் எச்சம்

சனியின் துணைக்கோளான என்சிலாடஸிசில் உயிரை உருவாக்க தேவையான அடிப்படைக்கு கூறுகள் இருப்பதை விஞானிகள் கண்டறிந்துள்ளனர். என்சிலாடஸ்ஸின் துருவத்தில் தடிப்பான பனிப்பாறைகளுக்கு கீழே இருக்கும் திரவநிலை சமுத்திரத்தில் இருக்கும் நீர் ஊற்றுப் போல பீச்சி அடிப்பதால் நீரும் அதில் கலந்துள்ள மூலக்கூறுகளும் விண்வெளியை வந்தடைகின்றன. இந்த நீரில் சேதன மூலக்கூறுகள் இருப்பதை நாசாவின் புதிய ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நீரில் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகிய மூலக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த மூலக்கூறுகளை பயன்படுத்தியே அமினோ அமிலங்கள் உருவாகின்றன. புரதத்தை உருவாக்கும் அடைப்படை கட்டமைப்பாக அமினோ அமிலங்கள் காணப்படுகின்றனர். பூமியில் புறத்தமின்றி அமையாது உயிர்.

என்சிலாடஸ்ஸின் தடிப்பான பனிப்பாறைக்கு கீழே இருக்கும் நீரில் கரைந்திருந்த சேதன மூலக்கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக பனிப்பாறைகளுக்கு கீழே ஒடுங்கி உறைந்திருந்தன. மேற்பரப்பில் இருக்கும் வெடிப்பின் இடையில் காணப்படும் நீரூற்று மூலம் வேகமாக இவை விண்வெளி நோக்கி பீச்சி எறியப்படுகின்றன. சனியை ஆய்வு செய்யச் சென்ற நாசாவின் காசினி விண்கலம் இந்த நீருக்கிடையில் கடக்கும் போது இவற்றை உணர்ந்து தரவுகளை சேகரித்து எமக்கு அனுப்பிவைத்தது.

நீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை நீர்.

எப்படி இருப்பினும் இந்த புதிய முடிவுகள் எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. இந்த அடிப்படை சேதன மூலக்கூறுகள், பூமியில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் கடலுக்கடியில் நிகழ்ந்தது போலவே என்சிலாடஸ் கடலடியில் ரசாயன தாக்கத்திற்கு உட்படலாம்.

பூமியில் கடலுக்கடியில் கடல்நீரும் எரிமலைக் குழம்பான மக்மாவும் கலக்கின்றன. அண்ணளவாக இதன் வெப்பநிலை 370 பாகை செல்ஸியஸையும் தாண்டுகிறது. இந்த வெப்பநிலை மூலம் ஹைட்ரொஜன் நிறைந்த வெந்நீர் அவ்விடத்தில் இருக்கும் சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமுற்று அமினோ அமிலங்களை உருவாக்குகிறது. இந்த அமினோ அமிலங்களே லீகோ கட்டிகள் போல ஒன்றுடனொன்று சேர்ந்து புரதத்தை கட்டமைக்க உதவுகிறது.

காசினி விண்கலம்

மேலே குறிப்பிட்ட செயன்முறை ஒளியின்றியே உயிரினம் ஒன்று உருவாக வழிவகுக்கிறது. என்சிலாடஸிசில் பனியின் கீழே இருக்கக்கூடிய கடலிலும் ஒளி செல்ல வாய்ப்பு இல்லாதிருப்பினும் அங்கேயும் இப்படியான செயற்பாடு இடம்பெறும் போது, உயிரினம் தோன்ற வழி உருவாகும்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் விண்மீன் ஒன்றிற்கு தொலைவில் இருக்கும் பகுதிகளில் உருவாக்கக்கூடிய உயிர்கள், ஒளியின்றியே உருவாகவேண்டிய கட்டாயம் இருப்பதுடன், தனது வாழ்விற்கும், கூர்ப்பிற்கும் ஒளியை தவிர்த்து வேறு காரணிகளை தத்தெடுக்க வேண்டிய நிலை இருக்கும்.

காசினி விண்கல தரவுகளை ஆய்வுசெய்யும் விஞானிகள் இன்னும் பலவருடங்கள் ஆய்வு செய்வதற்கான தரவுகள் இருப்பதாக கூறுகின்றனர். 1997 இல் அனுப்பப்பட்டு 13 வருடங்கள் காசினி விண்கலம் சனி மற்றும் அதன் துணைக்கோள்களை ஆய்வு செய்து தரவுகளை பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.

2017 இல் காசினி விண்கலம் தனது செயற்திட்ட காலத்தை நிறைவு செத்தவுடன், விஞானிகள் அதனை வேண்டுமென்றே சனியுடன் மோதி அழித்தனர். இதற்கு காரணம் காசினி டைட்டான் அல்லது என்சிலாடஸ் போன்ற உயிரினம் உருவாகியிருக்கக்கூடிய துணைக்கோள்களில் மோதி அக்கோள்களில் இருக்கும் உயிரினங்களை மாசுபடுத்திவிடக் கூடாது என்பதற்காகவாகும்.

சனியின் அடுத்த துணைக்கோளான டைட்டான் நோக்கி நாசா 2026 இல் ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. அணுச்சக்தியை பயன்படுத்தி இயங்கும் ஹெலி மூலம் இந்தத் திட்டம் டைட்டானின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். இது 2034 இல் டைட்டானை அடையும்.

படவுதவி: நாசா