பழம்பெரும் பேரடைகளின் புதையல்

மனிதர்களைப் போலவே விண்மீன் பேரடைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து குழுக்களாகவே வசிக்கின்றன. விண்மீன் பேரடைகள் எப்போதுமே குழுக்களாகவே வாழ்ந்துள்ளனவா அல்லது அண்மைக்காலத்தில் தான் இப்படியான ஒரு மாற்றத்தை நாம் அவதானிக்கிறோமா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.

விண்மீன் கொத்தொன்றை (galaxy cluster) உருவாக்கிக்கொண்டிருக்கும் மிகப்பழைய விண்மீன் குழு ஒன்றை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் குழுவில் உள்ள 12 விண்மீன் பேரடைகளும் நாம் இதுவரை அவதானித்த பேரடைகளில் மிகப்பழமையானவை. இவை அண்ணளவாக 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவை. இக்காலகட்டம் பிரபஞ்சம் உருவாகி சொற்பகாலத்தின் பின்னராகும்.

இம்மிகப்பழைய விண்மீன் பேரடையை கண்டறிய விஞ்ஞானிகள் ஹவாய் தீவில் இருக்கும் சுபரு (Subaru) தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரபஞ்ச வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர். அவ்வரைபடத்தை ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகளவில் செறிவாக பல அம்சங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர். அவையே ஈர்ப்புவிசை மூலம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்துகொண்டிருந்த பழைய விண்மீன் பேரடை குழுவாகும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு மிகமுக்கியமான ஒன்று. இப்பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருக்கும் போதே விண்மீன் பேரடைகள் குழுக்களாக ஒன்று சேர்ந்து விண்மீன் கொத்துக்களை உருவாக்கியுள்ளன. ஆனாலும் விண்மீன் கொத்துக்களை பற்றியும், பிரபஞ்ச தோற்றத்தின் பின்னர் அவை எப்படி மாறுதல்களுக்கு உள்ளாகின என்றும் இன்னும் ஆய்வு செய்யவேண்டிய விடையங்கள் பல இருக்கின்றன.

படவுதவி: NAOJ/Harikane et al.

மேலதிக தகவல்

விண்மீன் கொத்தொன்றில் ஓராயிரம் விண்மீன் பேரடைகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் பில்லியன் கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன என்பதை நாம் மறக்கக்கூடாது!