நண்டு நெபுலாவும் ஒரு சிறுகோளும்

இந்தப் படத்தை பார்த்தால் ஹபிள் தொலைநோக்கியின் லென்ஸில் கீறு விழுந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். படத்தில் இருப்பது நண்டு நெபுலா, ஆனால், அதில் கீறு விழுந்துள்ளது போல இருப்பது ஒரு சிறுகோள் (asteroid) ஆகும். அதுவும் நமது சூரியத் தொகுதியில் இருக்கும் சிறுகோள் பட்டியில் (செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் சிறுகோள்கள் நிறைந்துள்ள இடம்) இருக்கும் ஒருவர் தான். இவரை எமக்கு 2001 ஆம் ஆண்டில் இருந்து தெரியும். இன்னும் குறிப்பாக கூறவேண்டுமென்றால் இதன் பெயர் 2001 SE101.

படவுதவி: ESA/Hubble & NASA, M. Thévenot

ஹபிள் தொலைநோக்கி long exposure நுட்பத்தை பயன்படுத்தியே தொலைவில் இருக்கும் வின்பொருட்களை படம்பிடிக்கும். இப்படி நண்டு நெபுலாவை படம்பிடிக்கும் போது குறுக்கால் பயணப்பட்ட சிறுகோளும் படத்தில் சேர்ந்துவிட்டது.

நாசாவின் கணக்குப்படி சிறுகோள் பட்டியில் ஒரு கிலோமீட்டரை விட அதிக விட்டம் கொண்ட சிறுகோள்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1.9 மில்லியன் ஆகும். அதைவிட சிறிய அளவுள்ள சிறுகோள்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. ஆனாலும் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்தாலும் நமது நிலவின் திணிவில் 4% மட்டுமே வரும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு சீரிஸ் எனும் சிறுகோளில் இருக்கிறது.

பொதுவாக கபிள் தொலைநோக்கி படமெடுக்கும் போது அதன் படத்தில் சிறுகோள்கள் அடிக்கடி அக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் சிறுகோள்களின் அளவுதான். மேலும் சிறுகோள்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிக மிக அதிகம் என்பதும் இன்னொரு காரணம்.

மேலும் ஒரு தகவல்

நண்டு நெபுலா அண்ணளவாக பூமியில் இருந்து 6500 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது ஒரு விண்மீன் வெடிப்பின் (supernova) எச்சமாகும்.