பிரபஞ்சத் தொல்லியல்

பூமியிலுள்ள தொல்லியலாளர்கள் ஆரம்பக்கால உயரினங்கள் எப்படி இருந்தன என்று தெரிந்துகொள்ள மிகப்பழைய பாறைகளிலுள்ள புதைபடிவங்களை ஆய்வு செய்வார்கள். வரலாற்றின் குறித்த காலப்பகுதில் குறித்த விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டன. இதேபோல விண்ணியலாளர்களும் ஆதிகான விண்மீன்களைப் பற்றி அறிந்துகொள்ள மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளை அவதானிக்கின்றனர்.

இந்தப் பிரபஞ்சத்தில் முதன்முதலில் உருவாகிய விண்மீன் பேரடைகள் இன்றும் விண்ணியலில் புரியாத புதிராகவே இருக்கிறது. முதன்முதலில் எப்போது, அல்லது எப்படி இந்த விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்று எமக்குத் தெளிவாகத் தெரியாது. நாம் கணித்ததைவிட முன்கூட்டியே இந்தப் பிரபஞ்சத்தில் முதலாவது விண்மீன்கள் உருவாகியிருக்கலாம் என்று NASA/ESA வின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

கண்ணாம்பூச்சி ஆட்டம்

பிரபஞ்சத்தின் ஆரம்பக்காலத்தின் அது எப்படி இருந்தது என்று அறிய ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று தீர்மானித்தது. இதை அறிய இவர்கள் “Population III” வகையான பழமையானதும் தற்போது அழிந்துவிட்டதுமான விண்மீன்களை தேடினர். பிரபஞ்சத்தில் முதன்முதலில் தோன்றிய விண்மீன்கள் இவ்வகையானவையே என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். எனவே ஆரம்பக்கால விண்வெளியில் இந்தவகை விண்மீன்களை இவர்கள் தேடினர். எனவே ஒரு விண்மீன் பேரடையில் Population III வகை விண்மீன்கள் இருக்குமேயானால் இந்த விண்மீன் பேரடைகள் மிகப்பழமையானவை என நாம் அறியலாம். இது பூமியில் உள்ள தொல்லியலாளர்கள் முதலாவது உயிரினத்தின் புதைபடிவத்தை தேடுவது போன்றதுதான்.

கபிள் தொலைநோக்கி எடுத்த ஆரம்பக்கால விண்மீன் பேரடைகளின் படம்.

ஹபிள் தொலைநோக்கி எடுத்த இளமையான பிரபஞ்சத்தின் படங்களில் இப்படியான விண்மீன்களை ஆய்வாளர்கள் தேடினர். இந்தப் படங்களில் உள்ள விண்மீன் பேரடைகள் பிரபஞ்சம் 500 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் வருடங்கள் வயதாக காலகட்டத்தை சேர்ந்தவை. இது மிகப்பெரிய காலகட்ட இடைவெளி என்றாலும் பிரபஞ்சத்தின் ஆரம்பக்காலகட்டம் இதுவே. எனவே விண்ணியலாளர்கள் இந்த பேரடைகள் இக்காலகட்டத்தில் தான் புதிதாக தோன்றியிருக்கவேண்டும் என கருதுகின்றனர். ஆனாலும் இந்த விண்மீன் பேரடைகளில் ஒன்றில் கூட Population III வகை விண்மீன்கள் இல்லை என்பது ஆய்வாளர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் குறித்த காலகடத்தைவிட முன்னரே தோன்றியிருக்கவேண்டும் என்று எமக்குத் தெரிவிக்கின்றது.

எனவே பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன்களைப் பற்றி அறிய விண்ணியலாளர்கள் பிரபஞ்சத்தின் மிக ஆரம்பக்காலத்தை பார்க்கவேண்டும். ஹபிள் தொலைநோக்கியைவிட அடுத்து விண்ணுக்கு அனுப்பபடவிருக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் ஆரம்பக்காலத்தை இன்னும் துல்லியமாக காட்டும் திறன் கொண்டது.

படவுதவி: ESA/Hubble, M. Kornmesser

மேலதிக தகவல்

பெருவெடிப்பு நிகழ்ந்து வெறும் 250 மில்லியன் வருடங்களேயான பிரபஞ்சத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் அவதானிக்ககூடியதாக இருக்கும்!