வெடித்த செர்னோபில் அணுவுலை கட்டடத்தொகுதியில் உருவாகி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வகையான பங்கஸ் (பூஞ்சை) (Cladosporium sphaerospermum) அணுக்கதிர்வீச்சை “உணவாக்கிக்” கொள்ளக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
இந்த கதிவீச்சு உச்சவிரும்பி (radiation extremophile) பங்கஸ் பற்றி 2007 ஆம் ஆண்டு முதலே தெரிந்திருந்தாலும் செர்னோபில் பகுதியில் காணப்படும் பங்கஸ் ஆபத்தான கதிரியக்க செயற்பாடு கொண்ட செர்னோபில் அணுவுலையின் வெடித்துச் சிதறிய கிராபைட் துண்டுகளை உக்கலடையச் செய்கிறது. மேலும் இந்த பங்கஸ் அதிகூடிய கதிரியக்க தாக்கம் கொண்ட பகுதியிலேயே பெரும்பாலும் வளர்கிறது.
இந்த பங்கசிடம் காணப்படும் அளவுக்கதிகமான மெலனின் நிறமித்தொகுதிகள் கதிரியக்கத்தை உருஞ்சி சில செயன்முறைகள் மூலம் ஆபத்தற்ற சக்தியாக மாற்றுகின்றது. இந்த செயன்முறையை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் ஆபத்தான கதிரியக்க கசிவுகளை தடுப்பதுடன் அக்கதிரியக்க சக்தியை மீண்டும் புதுப்பிக்ககூடிய சக்தியாக மாற்றவும் முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
1986 இல் உக்கிரேனில் இடம்பெற்ற செர்னோபில் அணுவுலை வெடிப்பு எல்லோரும் அறிந்த மிக கொடூரமான விபத்தாகும். இன்றுவரை அனுவுலையைச் சுற்றியுள்ள பிரதேசம் மனிதர்கள் வசிக்க முடியாதளவு கதிரியக்க செயற்பாட்டுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 20,000 (சில விஞ்ஞானிகளின் கணிப்பின் படி 3000 வருடங்கள், ஆனாலும் பலரும் அதற்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்றே கருதுகின்றனர்) வருடங்களுக்கு இங்கே யாரும் வசிக்க முடியாதென்பதும் கதிரியக்கத்தின் வீரியத்தையும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
விந்தைமிகு இயற்கையில் இப்படியான பங்கஸ் மட்டுமே கதிரியக்கத்தை உண்பவையல்ல. அளவுக்கதிகமான கதிரியக்கத்தில் வாழக்கூடிய பங்கஸ் மற்றும் பல வகையான பட்கீரியாக்கள் பற்றி நாம் அறிகிறோம். இவற்றில் உள்ள ஒவ்வொரு இனமும் தனித்துவமான முறையை பயன்படுத்தி கதிரியக்கத்தை உருஞ்சவோ அல்லது தாங்கிக்கொள்ளவோ திறனை கொண்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகாலமாக உச்சவிரும்பிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நாசாவின் உயிரியல் தொழில்நுட்பவல்லுனரான டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரனின் ஆய்வுகள் மூலம் நமக்கு இப்படியான கதிரியக்க உச்சவிரும்பிகள் பற்றி நிறைய விடையங்கள் தெரியவருகிறது. வெங்கடேஸ்வரனின் குழு இந்த பங்கசை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்று சில ஆய்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.