இரண்டு அழகிகளின் கதை

ஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது.

விசித்திர பெயருக்கு காரணம் என்ன?

கோள்விண்மீன் படலம் (கோள்விண்மீன் நெபுலா / planetary nebula) என அழைக்கப்பட்டாலும், இந்தப் பிரபஞ்சக் கட்டமைப்பிற்கும் கோள்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரபஞ்ச வாயு, தூசு முகில்கள் சூரியன் போன்ற ஒரு விண்மீன் தனது மேற்பரப்பு படலத்தை வெளி நோக்கி வீசி எறிவதால் உருவாவதாகும். இப்படியான வெடிப்பு நிகழ்வு விண்மீன் ஒன்றின் வாழ்வுக்காலத்தின் இறுதியில் இடம்பெறும்.

இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது

எனவே இந்தப் பெயருக்கு காரணம் என்ன? நெபுலா என்றால் முகில் என்று பழைய இலத்தீன் மொழியில் அர்த்தம். முதன்முதலில் இவை விண்ணியலாளர்களால் அவதானிக்கப்பட்டபோது இவை யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்கள் சிறிய தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கபப்ட்டால் எப்படித் தெரியுமோ அப்படித் தெரிவதால் இந்தப் பெயர் உருவானது. காலப்போக்கில் அதே பெயரே அப்படியே நிரந்தரமாகிவிட்டது.

ஒரு புதிய பார்வை

ஹபிள் தொலைநோக்கி இதற்கு முன்னரும் இந்தக் கோள்விண்மீன் படலங்களை பல வருடங்களுக்கு முன்னர் படமெடுத்துள்ளது. ஆனால் தற்போது வைட் பீல்ட் கமரா 3 மூலம் புதிதாக இக்கட்டமைப்புகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கமரா மூலம் இதற்குமுன்னர் பாத்திராத வகையில் துல்லியமான தெளிவுடன் படங்களை எடுக்கமுடியும்.

இந்தப் புதிய படங்கள் மிகத் துல்லியமாக எப்படி இந்த இரண்டு நெபுலாக்களும் வேறுபடுகின்றன என்று எமக்கு காட்டுகின்றது. கடந்த இருபது வருடங்களில் எப்படியான மாற்றங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன என்று விண்ணியலாளர்களால் ஆய்வுசெய்யக் கூடியவாறு இருக்கிறது. குறிப்பாக விண்ணியலாளர்கள் இந்த அழகிய கட்டமைப்புகளில் உருவாகிய அதிர்ச்சி அலைகளை கண்காணிக்கின்றனர். ஒரு நீர்த் தடாகத்தில் கல்லொன்றை விட்டெறிந்தால் எப்படி அந்த நீரில் அலைகள் உருவாகுமோ அப்படித்தான் இந்த நெபுலாக்களின் அதிர்ச்சி அலைகளும் உருவாகும்.

இந்த இரண்டு நெபுலாக்களின் மையத்தில் முன்பு இருந்த விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவந்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒன்றையொன்று சுற்றும் விண்மீன்கள் சோடிவிண்மீன்கள் என அழைக்கப்படும். இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிவந்திருக்கவேண்டும் என்று சந்தேகிக்கக் காரணம் இந்த நெபுலாக்களின் விசித்திர வடிவம்தான்.

படவுதவி: NASA, ESA, and J. Kastner (RIT)

மேலதிக தகவல்

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட விண்மீன்கள் சோடிவிண்மீன்களாகத்தான் இருக்கின்றன. இப்படியான சில தொகுதிகளில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விண்மீன்களும் காணப்படுகின்றன. பிரபலமான சோடிவிண்மீன் தொகுதியை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கமுடியும். எழுமீன்/சப்தரிஷி விண்மீன் கூட்டத்தில் இருக்கும் மிசார் மற்றும் அல்கோர் (அருந்ததி) ஆகிய விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றுகின்றன.