ஒரு மந்திரவாதியின் வித்தை காட்டும் நிகழ்வின் கடைசியில் மந்திரவாதியே மறைந்துவிடுவது போல ஒரு பெரும் விண்மீன் ஒன்று திடிரென்று மறைந்துவிட்டது!

விசித்திரமான மந்திரவாதி

பூமியில் இருந்து சுமார் 75 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் கும்பம் விண்மீன் தொகுதியில் இந்த விசித்திர விண்மீன் உள்ளது.

2001 இற்கும் 2009 இற்கும் இடையில் பல விஞ்ஞானிகள் குழு இந்த விண்மீனை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில் இந்த விண்மீன் அதனது வாழ்வுக்காலத்தின் இறுதியில் இருப்பதாக தெரியவந்தது. அண்மையில் விண்ணியலாளர்கள் குழு ஒன்று மீண்டும் இந்த விண்மீனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் VLT தொலைநோக்கியை கொண்டு இவ்விண்மீனை அவதானிக்க முற்பட்டபோது அங்கே அந்த விண்மீன் இல்லை!

திடீர் மறைவுக்கு எப்படி காரணம் கண்டறிவது?

மந்திரவாதி திடிரென மறைந்தவுடன் ஆர்வத்துடன் அவர் எங்கே என்று தேடும் பார்வையாளன் போல நாமும் இந்த அசூர விண்மீன் எப்படி மறைந்திருக்கும் என்று சிந்திக்கிறோம்.

தனது வாழ்வுக்காலத்தை முடித்துவிட்டு சுப்பர்நோவாவாக மறைந்திருந்தால் உலகின் பல இடங்களில் இருக்கும் விண்ணியலாளர்களின் கண்களில் இருந்து அப்படியான பாரிய பிரகாசமான வெடிப்பு தப்பியிருக்காது.

எனவே விண்ணியலாளர்கள் இந்த விண்மீன் இன்னும் அங்கேதான் இருப்பதாகவும் ஆனால் அதனை அவதானிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். உதாரணமான அந்த விண்மீனின் பிரகாசம் குறைந்திருக்கலாம் இது இங்கிருந்து அந்த விண்மீனை அவதானிப்பதற்கு தடங்கலாக இருக்கும்.

இன்னொரு விளக்கம், அது சுப்பர்நோவாவாக வெடிக்காமல் கருந்துளையாக மாறியிருக்கமுடியும். இது ஒரு வியக்கத்தகு விடையம்தான். இதற்குக் காரணம் ஒரு பெரிய விண்மீன் சுப்பர்நோவாவாக வெடித்து அதன் பின்னரே கருந்துளையாக மாறும் என்று தான் இதுவரை நாம் அறிந்திருக்கிறோம்.

இனிவரும் காலங்களில் செய்யப்படும் ஆய்வுகள் எப்படி இந்த விண்மீன் எமது பார்வையில் இருந்து மாயமாய் மறைந்தது என்பதற்கான காரணத்தை கண்டறிய உதவும். அதுவரை பொறுமையாக மந்திரவாதியின் வித்தைகளை கண்டு களிப்புறலாம்.

படவுதவி: ESO/L. Calçada

மேலதிக தகவல்

மறைவதற்கு முன்னர் இந்த விண்மீன் சூரியனைப் போல 2.5 மில்லியன் மடங்கு பிரகாசமாக இருந்தது! அதனைத் தவறவிடுவது என்பது சாத்தியமல்லவே!

Previous articleஇரண்டு அழகிகளின் கதை
Next articleஇரண்டு அழகிகளின் கதை