பிரபஞ்சத்தின் பல பகுதிகளையும் அழகிய புகைப்படங்களாக எமக்கு காட்டிய ஹபிள் தொலைநோக்கி பற்றி நாமறிவோம். அண்மையில் ஹபிள் பிரபஞ்சத்தை அவதானிப்பதில் இருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு நமக்கு மிக அருகில் இருக்கும் நிலவை அவதானித்திருக்கிறது.
சந்திர கிரகணம்
வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு விண்வெளித் தொலைநோக்கி பூரண சந்திர கிரகணத்தின் போது நிலவை அவதானித்திருக்கிறது. பூரண சந்திர கிரகணம் என்பது நிலவிற்கும் சூரியனிற்கும் இடையில் பூமி கடக்கும் வேளையில் பூமியின் நிழலில் நிலவு மறைவதாகும்.
இப்படியான காலப்பகுதியில் நிலவு பார்பதற்கு சிவப்பு நிறமாகத் தெரியும். எனவே 2019 இல் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின் போது சில ஆய்வுகளை மேற்கொள்ள ஹபிள் தொலைநோக்கி நிலவை நோக்கி திரும்பியது.
ஒரு பெரும் கண்ணாடி
குறிப்பாக உண்மையை கூறவேண்டுமென்றால் ஹபிள் நிலவை ஆய்வு செய்வதற்காக நிலவின் பக்கம் திரும்பவில்லை, மாறாக அது நிலவை நோக்கி திரும்பியதன் காரணம் ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கே! விண்ணியலாளர்கள் பிறவிண்மீன் கோள்களை தேடும் போது குறித்த விண்மீனின் பிரகாசத்தில் ஏற்படும் தற்காலிக குறைபாட்டை கணக்கிடுகின்றனர். இப்படியான தற்காலிக பிரகாசக் குறைவு என்பது குறித்த வின்மீணிற்கும் எமக்கும் இடையில் கோள் ஒன்று கடந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

இதே செயன்முறையைத் தான் ஹபிள் ஆய்வாளர்கள் நிலவை வைத்து பின்பற்ற முயன்றுள்ளனர்! நிலவில் பட்டு தெறிப்படையும் சூரியனில் இருந்து பூமியினூடாக கடந்துவந்த புறவூதாக் கதிர்களை ஹபிள் அளவெடுத்துள்ளது.
இங்கு குறிப்பிடவேண்டிய விடையம் என்னவென்றால், நிலவு ஒரு பெரும் கண்ணாடியாய் தொழிற்பட்டுள்ளது என்பதேயாகும். நிலவில் இருந்து தெறிப்படைந்த புறவூதாக் கதிர்களை ஹபிள் தொலைநோக்கி ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் மூலக்கூறுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
உயிர் இருப்பதற்கான ஆதாரம்
இந்த ஆவின் மூலம் ஹபிள் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலத்தில் இருக்கும் ரசாயனங்களை அளவிட்டுள்ளது. ஓசோன் என்பது பூமியில் உயிர் இருப்பதற்கான முக்கியமான ஒரு அடையாளம் ஆகும். எனவே ஓசோன் அளவை ஆய்வு செய்வது என்பது விண்ணியலாளர்கள் ஒரு பிறவிண்மீன் கோளொன்றில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறை கணக்கெடுக்க உதவும்.
நிலவை வைத்து செய்த 2019 ஆண்டு ஆய்வு ஒரு பரீட்சாத்திய முயற்சியே. இதன் மூலம் விண்ணியலாளர்கள் எப்படி பிறவிண்மீன் கோளொன்றில் இருக்கும் வளிமண்டல ரசாயனங்களை ஆய்வு செய்யலாம் என்று கற்றுக்கொள்வதற்கான ஒரு முயற்சி. இந்த நுட்பத்தை ஏனைய விண்மீன்களை சுற்றிவரும் கோள்களுக்கு பிரயோகப்படுத்திப் பார்க்க எமக்கு ஹபிள் தொலைநோக்கியை விட சக்திவாய்ந்த தொலைநோக்கி தேவைப்படும். 2021 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட தயாராகிக்கொண்டிருக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதற்கு சரியானதாக இருக்கும்.
படவுதவி: ESA/Hubble, M. Kornmesser
மேலதிக தகவல்
அடுத்த பூரண சந்திரகிரகணம் மே 26, 2021 இல் இடம்பெறும். இதனை தெளிவாக அவுஸ்திரேலியா, மேற்கு ஐக்கிய அமேரிக்கா, மேற்கு தென் அமேரிக்கா மற்றும் சிலவேளைகளில் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து அவதானிக்கக்கூடியவாறு இருக்கும்.