20,000 வருடங்களுக்கு முன்னரே மனிதனைத் தாக்கிய கொரோனா வைரஸ்

சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் DNAவை பரிசோதித்ததில் 20,000 வருடங்களுக்கு முன்னரே கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் கிழக்காசிய நாடுகளை தாக்கியிருப்பது தெரிகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஜீன்களில் 42 ஜீன்கள் கொரோனா வகை வைரஸ் தாக்குதலால் மாற்றமடைந்துள்ளது.

2019 கொரோனா தாக்குதலால் இதுவரை 3.8 மில்லியன் இறப்புகள் மற்றும் பில்லியன் கணக்கான டாலர் பொருளாதார வீழ்ச்சி என உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

மனித உடல் சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய இசைவாக்கிக்கொள்ளும் அடிப்படையில் உடலில் உள்ள ஜீன்களில் சில மாற்றங்களை உண்டாக்கும். இம்மாற்றங்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்ச்சியாக வருவதுடன் மாற்றம் ஏற்படுத்திய காரணிகளுக்கான தடயங்களையும் விட்டுச் செல்லும்.

SARS-CoV-2

மரபியலாளர்கள் மேலே குறிப்பிட்ட வகையான மாற்றங்களை அவதானிக்க பல்வேறுபட்ட புள்ளிவிபரவியல் கருவிகளை பயன்படுத்துகின்றனர். இப்புள்ளிவிபர தரவுகள் ஜீன்களில் ஏற்படும் மாற்றம் எப்படி வரலாற்றைக் கடந்துவந்துள்ளது என தெரிந்துகொள்ள உதவுகிறது.

மலை உச்சியில் குறைந்தளவு ஆக்சிஜனை சுவாசித்து வாழக்கூடிய பண்பு, வளர்ந்தவர்களும் பாலை உட்கொள்ளக்கூடியதாக இருப்பதற்கு காரணம் ஜீன்களின் மரபியல் மாற்றமே.

இப்படியான ஒரு மரபியல் மாற்றம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வரலாற்றில் எப்போதாவது ஏற்பட்டிருப்பின் அவற்றை எம்மால் கண்டறியமுடியும். அதுமட்டுமல்லாது, ஜீன்களில் இவை ஏற்படுத்திய மாற்றங்கள் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மனித உடலில் ஏற்படும் நோய் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று அறிந்துகொள்ளவும் முடியும்.

உலகில் 26 பகுதிகளில் வசிக்கும் 2500 பேரிடம் இருந்து பெறப்பட்ட ஜினோம் தரவுகளைக் கொண்டு செய்த ஆய்வில் 42 வேறுபட்ட மனித ஜீன்களில் VIPகளும் சேர்ந்து பினைக்கப்பட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்களுக்கான தடையங்கள் இருப்பது தெரியவருகிறது.

VIPs (Viral interacting proteins) என்றால் என்னவென்று பார்க்கலாம். வைரஸ்கள் மிக எளிமையானவை. அவற்றின் ஒரே நோக்கம் தன்னைப்போலவே பல பிரதிகளை உருவாக்குவது. ஆனால் அவற்றால் சுயமாக இதனைச் செய்யமுடியாது. எனவே இவை வேறு உயிரினத்தின் கலங்களில் புகுந்து அக்கலங்களின் தொழிற்பாட்டில் கைவைக்கின்றன. இப்படியான வைரஸ் படையெடுப்புகள் உயிருள்ள கலங்கள் உருவாக்கும் சில குறிப்பிட்ட புரதக் கட்டமைப்புடன் இந்த வைரஸ்கள் தங்களைப் பொருத்திக்கொள்வதன் மூலம் அந்தக் கலங்களின் தொழிற்பாட்டை முடக்கிவிடும். இப்படியான புரதக் கட்டமைப்புகளையே நாம் vairal interacting proteins (VIPs) என அழைக்கிறோம்.

ஆய்வு செய்த 2500 பேர்களில் குறிப்பாக 5 பிரதேசங்களில் வசிக்கும் ஆட்களின் ஜீன்களில் கொரோனா சார்ந்த VIPக்கள் விட்டுச் சென்ற தடயங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து பிரதேசங்களும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவை. இந்தத் தடையங்கள் மூலம் தெரியவருவது என்னவென்றால் 20,000 தொடக்கம் 25,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்காசிய நாடுகளில் வசிப்பவர்களின் முன்னோர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை சந்தித்திருக்கவேண்டும்.

மேலும் குறித்த 42 ஜீன்களில் காணப்படும் VIP தடையங்கள் நுரையீரலைச் சார்ந்தவை. இவ்வகையான நுரையீரல் திசுக்களே COVID-19 ஆல் பாதிக்கப்படும் முக்கியமான பகுதியாகும். அதுமட்டுமல்லாது கண்டறியப்பட்ட VIPக்கள் SARS-CoV-2 வைரசுடன் நேரடியாக செயலாற்றும் புரதங்களாகும்.

வைரஸ்களுடன் செயலாற்றும் VIPக்களை கண்டறிவதன் மூலம் அதனைக் குறிவைத்து மருந்துகளை உருவாக்கமுடியும். மேலும் வரலாற்றில் ஏற்கனவே இடபெற்ற தாக்குதல்களை ஆய்வு செய்வதன் மூலம் ஜீன் மாற்றங்கள், மரபியல் திரிவுகள் எப்படி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கடரிந்து எதிர்காலத்தில் வரக்கூடிய பெரும் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.