பிரபஞ்ச வாணவேடிக்கையும் ஒரு திருப்புமுனையும்

தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் மத்தியில் இடம்பெறும் அசாத்திய வெடிப்பான ‘காமாக் கதிர் வெடிப்பைப்’ பற்றி நீங்கள் வேள்விப்பட்டதுண்டா? குறிப்பாக சொல்வதென்றால், காமாக் கதிர் வெடிப்புகள் பிரபஞ்சத்தில் இடம்பெறக்கூடிய மிகவும் பிரகாசமானதும் சக்திவாய்ந்ததுமான நிகழ்வுகளாகும். இந்த மில்லி செக்கன்கள் தொடக்கம் சிலபல மணித்தியாலங்கள் வரை நீடிக்கும்.

விண்ணியலாளர்கள் காமாக் கதிர் வெடிப்புகளை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். ஒன்று குறுகிய காமாக் கதிர் வெடிப்பு. இவை இரண்டு செக்கன்களுக்கு குறைவான நேரமே நீடிக்கிறது. இந்த வெடிப்பு இரண்டு நியூட்ரோன் விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு நியூட்ரோன் விண்மீனாக மாறும் வேளையில் ஏற்படுகின்றது என நம்பப்படுகிறது. அடுத்தது நீண்ட காமாக் கதிர் வெடிப்பு, இவை சூப்பர்நோவா நிகவுகளின் ஆரம்பத்தில் இடம்பெறுவதாக நம்பப்படுகிறது.

ஜெமினி ஆய்வகத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வுகளில் காமாக் கதிர் வெடிப்புகள் மேலே குறிப்பிடப்பட்ட வகைகளுள் மட்டும் மட்டுப்படுத்தப் பட்டவை அல்ல என்று தெரியவருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் 0.6 செக்கன்கள் நீளமான காமாக் கதிர் வெடிப்பு ஒன்று தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் பேரடையில் இடம்பெற்ற சூப்பர்நோவா நிகழ்வொன்றில் இருந்து வருவதை அவதானித்துள்ளனர் – இதுதான் இதுவரை அவதானித்துள்ள குறுகிய காலம் நீடித்த சூப்பர்நோவா வகை காமாக் கதிர் வெடிப்பாகும்.

உடையும் விண்மீன் ஒன்று சூப்பர்நோவாவாக வெடிப்பதற்கு முன்னர் குறுகிய காமாக் கதிர் வெடிப்பை உருவாக்கும் நிகழ்வு ஒன்றின் வரைபடம்.

இப்படியான மிகக் குறுகிய நேரம் நீடிக்கும் சூப்பர்நோவாக்களில் இருந்துவரும் காமாக் கதிர் வெடிப்புகளுக்கு காரணம் குறித்த விண்மீனின் பிடியில் இருந்து வெளிவருமளவிற்கு காமாக் கதிர் தாரைகள் பலமானதாக இருப்பதில்லை என்பதுதான். சிலவேளைகளில் உடையும் விண்மீன்களின் காமாக் கதிர் தாரைகள் மிகவும் பலமிழந்து காணப்பட்டால், அவை காமாக் கதிர் வெடிப்புகளை உருவாக்குவதே இல்லை.

இந்த புதிய ஆய்வு முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. இது நீண்ட நாட்களாக விண்ணியலில் இருக்கும் ஒரு புதிரை அவிழ்க்க உதவக்கூடும். நீண்ட காமாக் கதிர் வெடிப்புகள் ஒரு குறிப்பிட்ட வகையான சூப்பர்நோவா நிகழ்வுகளில் (Type Ic-BL) இருந்து வருகிறது என்று கருதப்படுகிறது. ஆனாலும் இடம்பெறும் சூப்பர்நோவா நிகழ்வுகளை ஒப்பிடும் போது உருவாகும் நீண்ட காமாக் கதிர் வெடிப்புகள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. இதற்கு காரணம், இந்த சூப்பர்நோவாக்கள் விண்ணியலாளர்கள் எதிர்பார்த்ததை போலல்லாமல் நீண்ட காமாக் கதிர் வெடிப்புகளுக்குப் பதிலாக குறுகிய காமாக் கதிர் வெடிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும்.

எனவே காமாக் கதிர் வெடிப்புகளை அவற்றின் கால அளவைக் கொண்டு வகைப்படுத்துவது சரியான முறையாக அமையாது. எனவே காமாக் கதிர் வெடிப்புகளை உருவாக்கும் காரணிகள் என்னவென்று மேலும் ஆய்வுகளை செய்யவேண்டும்.

படம் : உடையும் விண்மீன் ஒன்று சூப்பர்நோவாவாக வெடிப்பதற்கு முன்னர் குறுகிய காமாக் கதிர் வெடிப்பை உருவாக்கும் நிகழ்வு ஒன்றின் வரைபடம்.

படவுதவி: International Gemini Observatory/NOIRLab/NSF/AURA/J. da Silva. Image processing: M. Zamani (NSF’s NOIRLab)

மேலதிக தகவல்

காமாக் கதிர் வெடிப்புகள் மிகவும் அரிதான நிகழ்வுகளாகும் – ஆனால் இவை இடம்பெறும்போது மிக அதிகளவான சக்தி வெளிப்படும். நமது சூரியன் அதனது 10 பில்லியன் வருட ஆயுட்காலத்தில் எவ்வளவு சக்தியை வெளியிடுமோ அவ்வளவு சக்தியை சூப்பர்நோவா வெடிப்பு சில செக்கன்களில் வெளியிட்டுவிடும்!