பிரபல கருந்துளையும் அவரின் சுற்றுப்புறமும்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முதன்முறையாக கருந்துளை ஒன்றின் படத்தை நேரடியாக பார்த்து அதிசயித்தோம். பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் M87 விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையினை “நிகழ்வெல்லை தொலைநோக்கி” திட்டத்தின் விஞ்ஞானிகள் எமக்கு படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.

இந்த வாரத்தில் 19 அவதானிப்பகங்கள் ஒன்று சேர்ந்து M87 கருந்துளையை பற்றி மேலும் புதிய தரவுகளை வெளியிட்டுள்ளனர். இதரவுகள் மூலம் இவ் இராட்சதக் கருத்துளையைப் பற்றி மேலும் தெளிவாக தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் அதேவேளை ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாட்டை பரீட்சித்துப் பார்க்கவும் முடியும்.

பொ.சா.கோ பெரும் திணிவுள்ள பொருட்கள் அவற்றைச் சுற்றியுள்ள வெளி-நேரத்தை துணிபோல வளைத்திருக்கும் என்று கூறுகிறது. அதாவது ஈர்ப்புவிசை என்பது வெளி-நேர வளைவினால் உருவாகியிருக்கும் ஒரு பக்கவிளைவு எனலாம்.

இதனை கற்பனை செய்து பார்ப்பது என்பது கடினமான காரியமே. கட்டில் மெத்தையின்மேல் ஒரு பாரமான பொருளொன்றை வைத்தால் அதனைச் சுற்றியிருக்கும் பகுதி அமிழ்ந்துவிடும் அல்லவா? இப்போது சில மார்பில் கோலிகளை அப்பகுதியைச் சுற்றி வைத்தால் அவை பாரமான பொருளை நோக்கி கவரப்படுவது போல அதனை நோக்கி செல்லும். ஆனால் உண்மையில் மெத்தை அமிழ்ந்திருப்பதால் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுகிறது. குறித்த பொருளின் பாரத்தை பொறுத்து மெத்தை அமிழும் அளவும் மாறுபடும்.

இதே போலத்தான் கோள்களும். கோள்களின் திணிவு அதிகரிக்க அவற்றை சுற்றியுள்ள வெளி-நேரமும் அதனைச் சுற்றி அமிழ்கிறது. எனவே வேறு சிறிய விண் பொருட்கள் இவற்றை நோக்கி இழுக்கப்படுகின்றன.

இப்பிரபஞ்சத்தை பொறுத்தவரை இப்படி தன்னைச் சுற்றியிருக்கும் வெளி-நேரத்தை மிகவும் அதிகமாக அமுக்கும் ஜாம்பவான் கருந்துளையார் தான். எனவே இவற்றைச் சுற்றியுள்ள பகுதியில் ஐன்ஸ்டனின் பொ.சா.கோ வேலை செய்வதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

கருந்துளையின் அளப்பரிய ஈர்ப்புவிசை அதனைச் சுற்றியிருக்கும் தூசு/வாயுக்களை மிக வேகமாகவும் கடும் தொலைவிற்கும் வீசியெறிவதை (தாரகை போல) அவதானிக்கலாம். இவற்றின் வேகம் ஒளியின் வேகத்திற்கு மிக மிக அருகில் இருக்கும்! இந்த வாயுத் தாரகை மின்காந்த அலைவீச்சில் எல்லா வீச்சுக்களில் ஒளிர்கிறது. எம்மால் பார்க்கக்கூடிய கட்புலனாகும் ஒளி முதல், கண்களுக்கு புலப்படாத எக்ஸ் கதிர்வீச்சு, புறவூதாக் கதிர்வீச்சும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு கருந்துளைக்கும் ஒவ்வொரு விதத்தில் இந்த வாயுத் தாரகை இருக்கும். அதன் அமைப்பைக் கொண்டு குறித்த கருந்துளையின் சுழற்சி வேகம் மற்றும் அதன் சக்தியின் அளவை விண்ணியலாளர்களால் ஓரளவிற்கு கணக்கிடமுடியும். ஆனாலும் காலம் செல்லச் செல்ல இத்தாரகையின் அமைப்பு மாறுவதால் விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக அதனை அவதானிக்கவேண்டியிருக்கும் – இதனால்தான் 19 அவதானிப்பகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இப்படியாக அளவிற்கதிகமாக தரவுகளை சேகரித்து அதனை ஆய்வுசெய்வதன் மூலம் கருந்துளைக்கும் அதனைச் சுற்றியிருக்கும் வாயுத் தாரகைக்கும் இருக்கும் தொடர்பை எம்மால் தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தத் தொடர்பை புரிந்துகொள்வது விண்ணியலில் ஒரு பெரும் முடிச்சை அவிழ்ப்பதற்கு சமம்!


படவுதவி: The EHT Multi-wavelength Science Working Group; the EHT Collaboration; ALMA (ESO/NAOJ/NRAO); the EVN; the EAVN Collaboration; VLBA (NRAO); the GMVA; the Hubble Space Telescope; the Neil Gehrels Swift Observatory; the Chandra X-ray Observatory; the Nuclear Spectroscopic Telescope Array; the Fermi-LAT Collaboration; the H.E.S.S collaboration; the MAGIC collaboration; the VERITAS collaboration; NASA and ESA. Composition by J. C. Algaba

மேலதிக தகவல்

கருந்துளையின் இருந்துவரும் வாயுத் தாரகை பற்றி பல விடையங்களை அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. இந்தத் தாரகைகள் மிகச் சக்திவாய்ந்தவை என்று எமக்கு ஏற்கனவே தெரியும். இச்சக்தி இத்தாரகைகள் அதன் மூல விண்மீன் பேரடையில் இருந்து வெளியே செல்லுமளவிற்கு சக்திவாய்ந்ததாக இருக்கிறது!