கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற்பியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சூப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ நமக்கு சொல்கிறது.

இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தி மிக அதிகமாக இருப்பதனால் மற்றைய சக்திகளை விட, ஈர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரித்துவிடும். இந்த அதிகூடிய ஈர்ப்புவிசையால் அதனிலிருந்து எந்தவொரு மின்காந்த அலைகளும், வேறு விதமான துணிக்கைகளும் வெளிவரமுடியாமல் போவதால் இதை கருந்துளை எனலாம் என ஜான் வீலர் கருதினார்.

மிஸ்டர் கருந்துளையை நேரடியாக அவதானிக்க முடியாதது ஏன் என்பது பற்றி பாப்போம். கருந்துளைகள் எந்தவொரு மின்காந்த அலைகளையும் வெளிவிடுவதில்லை, ஆகவே நமது ஒளியியல் தொலைகாட்டிகளோ, அல்லது எக்ஸ்ரே, அகச்சிவப்புத் தொலைகாட்டிகளோ கருந்துளை விடயத்தில் நேரடியாக பயனற்றவை. ஆனால் கருந்துளையின் மிகப்பெரிய பலமே அதனது ஈர்புவிசையாயாகும், அதுவே அதனை காட்டிக்கொடுக்கக்கூடிய சமாச்சாரமும் ஆகும். நாம் நேரடியாக கருந்துளைகளை காணாவிடினும், அது, தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சப்பொருட்களின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசையால் கருந்துளைகளை நாம் கண்டுகொள்ளலாம்.

கருந்துளை ஒன்று மீனிடைத்தூசு அல்லது மீனிடைமுகில்கள் (interstellar dust / gas clouds) அருகில் வரும்போது, கருந்துளையானது, அத்தூசுகளை தன்பால் ஈர்த்து, தன்னைச் சுற்றி ஒரு திரள் வளர்ச்சியை (accretion) உருவாகிக்கொள்ளும். இதே போல ஒரு விண்மீனும், கருந்துளையின் பாதையில் குறுக்கிட்டால், கொக்கோகோலாவை ஸ்ட்ரோ போட்டு உறுஞ்சுவதைபோல விண்மீனையும் உருஞ்சிவிடும் இந்தக் கருந்துளை. இவ்வாறு உறுஞ்சப்பட்ட விண்மீனோ, மீனிடைத்தூசுகளோ சேர்ந்து உருவாகிய திரள் வளர்ச்சியானது, வேகமாக இந்த கருந்துளையை சுற்றும்போது, அவை வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் (x-ray) வெளிவருகின்றது. இவ் எக்ஸ் கதிர்களை எம்மால் அவதானிக்க முடியும்.

கருந்துளையை சுற்றியுள்ள திரள் வளர்ச்சியும், ஒரு நட்சத்திரத்தை கருந்துளை உறுஞ்சும் விதமும்
கருந்துளையை சுற்றியுள்ள திரள் வளர்ச்சியும், ஒரு நட்சத்திரத்தை கருந்துளை உறுஞ்சும் விதமும்

ஆக ஒரு விண்மீனின் இறப்பில் இருந்து கருந்துளை ஒன்று பிறக்கின்றது. எல்லா கருந்துளைகளும் விண்மீன்களின் வாழ்வின் முடிவில் நிகழும் சூப்பர்நோவா எனும் மீயொளிர் விண்மீன் வெடிப்பினால் உருவாவதில்லை, ஆனால் பெரும்பாலான கருந்துளைகள் இவ்வாறே உருவாகுகின்றன.

கருந்துளைகளிலும் பல்வேறு வித்தியாசமான கருந்துளைகள் உண்டு. அதேபோல ஒரு தமிழ் இயற்பியலாளரின் பங்களிப்பும் மிக முக்கியம், அவர்தான் சுப்பிரமணியன் சந்திரசேகர்.

படங்கள்: இணையம்