சக்திமிக்க வார்த்தைகள்

சாபம்

உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.

அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு இந்தியர். அந்தக்காலத்திலேயே BA படித்து விமான ஓட்டியாக வேறு இருந்தவர், எதோ காரணத்துக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு சாமியாராக வந்துவிட்டார். நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டான மனிதர் என்று அப்பா சொல்லுவார். அப்பா அங்கிருக்கும் காலத்தில் மிசனில் மற்ற மாணவர்களையும் மேற்பார்வயிடுபவராக, சாமி பூசை செய்பவராகவும், இந்த சாமியாரின் உதவியாளராகவும் இருந்துள்ளார்.

ஒரு முறை நம்மூர் காரர் தான், லண்டனுகெல்லாம் போய் பொறியியல் படித்தவர், பெயர் மறந்துவிட்டது, இங்கு வந்திருந்த சமயம், இவருக்கும் சாமியாருக்கும் பெரிய வாக்குவாதம் வந்துவிட்டதாம். அந்தக்காலத்தில் மிசனின் கட்டுப்பாட்டில் பல பாடசாலைகள் இருந்தன, சிலவற்றை சுயாதீனமாக இயங்க விட்டிருந்தது மிசன், ஆனால் போதுமானளவு பெறுபேறை காட்டாத பாடசாலைகளை மீண்டும் மிசனின் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாமியார் நினைத்துள்ளார், ஆனால் இதற்கு பொறியியல் ஆசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார், அதற்கான காரணத்தை அப்பா சொல்லியிருந்தாலும் அது நமக்கு இப்போது அவசியமில்லை.

மிகவும் தப்பான பாணியில், பொறியியல் ஆசாமி பேசிவிட, மனம் பொறுக்காத சாமியார், “இப்படி பேசினால் அழிந்துவிடுவாய்” என்று கூறிவிட்டு கூடத்தையும் கலைத்துவிட்டு மண்டபத்துக்கு போய் அமர்ந்துவிட்டாராம், அப்பாக்கு என்ன ஆச்சரியம் என்றால், மாணவர்களைக்கூட ஒரு வார்த்தை நோவதுபோல சொல்லமாட்டாரம் இந்த சாமியார். அப்பாவிடமே, அன்று கடுமையாக தான் பேசிவிட்டாதாக சொல்லியிருக்கிறார், மிக்க வேதனையும் அடைந்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அந்த பொறியியலாளர் மீண்டும் லண்டனுக்கே போய்விட்டார். அங்கு சுரங்க பணியில் வேலை செய்துள்ளார். ஒரு நாள் இங்கு சாமியார், எதோ ஒரு குருபூசை தினம், சாமியார் தான் பூசை செய்ய வேண்டும், அனால் சாமியார் மிகவும் மனமுடைந்து இருந்திருக்கிறார், அப்பாவிடம் பூசை செய்ய சொல்லிவிட்டு, இவர் மீண்டும் மண்டபத்துக்கு வந்து விட்டார். பூசை முடித்து அப்பா சாமியாரை பார்க்க சென்ற போது, சாமியார் கண்களில் நீர், “தப்பு பண்ணிட்டண்டா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியுள்ளார். அனால் இங்கே ஒருவருக்கும் என்ன நடந்ததென்று தெரியவில்லை.

ஒரு மதமோ, சில நாட்களோ கழித்தே , சேதி வந்துள்ளது, லண்டனில் சுரங்கத்தில் தீப்பிடித்து, வேலை செய்தவர்களில் இந்த பொறியியலாளர் இறந்துவிட்டார். அதுவும் இறந்தது, பூசை செய்யாமல் சாமியார் அழுத அன்று.

சில பெரிய மனிதர்களின் வார்த்தைகளின் சக்தி மிகவும் அழுத்தமானது என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். ஆனால் இப்போது இப்படி பெரிய மனிதர்கள் தேடினாலும் கிடைப்பார்களா என்பதே சந்தேகம் தான்.

சிறி சரவணா