தீ மிதிப்பு

தீ மிதிப்பு விழாபாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார்.

வரிசையில் நின்று தான் தீ மிதிப்பு இடம்பெறும். எனக்குப் பின்னால் என்னுடைய நண்பர். நான் தீ மிதித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தபொழுது எனக்கு அன்று அதிக வெப்பம் காலில் படுவதை உணர்ந்தேன். அதனால் வேகமாக நடந்து ஒரு “எக்ஸ்ரா ஜம்” பண்ணி வெளியில் வந்து விட்டேன். பின்னால் வந்த நண்பர் அதீத பக்தி காரணமாக பவ்வியமாக மெதுவாக வந்தார். வெளியில் வந்து இருந்த பின்புதான் அலறத் தொடங்கினார். அவர் கண்களில் நீர் வழிந்தோடத் தொடங்கியது. அதனால் அவர் வீட்டுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே நண்பரின் வீட்டுக்குச் சென்றால் பலர் அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார் “கால் எரியுது, நான் சாகப் போகிறேன்” என்று. அதன் பின்னர் பல முதலுதவி எல்லாம் செய்யப்பட்டு நண்பரின் கால் காயம் ஆறுவதற்கு 02 வாரங்கள் ஆயிற்று.

இந்தக் காயம் ஆற வேண்டும் என்று நண்பருக்கு நெருக்கமான ஒருவர் பின்னர் தீ மிதித்தது வேறு கதை. அதனால் தான் மறுபடியும் தீ மிதிக்க வேண்டி வருமோ என்று நண்பர் பயந்த வரலாறும் உண்டு.

அந்த விடயத்துடனே தீ மிதிப்பு என்றால் நமக்கு கொஞ்சம் தள்ளித்தான்…

அமர்நாத்