திருக்குறள் கூறிய வாய்மை

வாய்மை

திருக்குறள், திருவள்ளுவரால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. அழகான இருவரிகளில் கருத்தை ஆழமாக எடுத்துச்சொல்கிறது இந்த குறள்கள் தமிழுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்தவர் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்பதால் உலகப்பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் மொத்தமாக 133 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை கொண்டுள்ளது. நாம் இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு அதிகாரங்களில் உள்ள குறள்களாக, பொருள் சகிதம் பார்ப்போம்.

இன்று நாம் பார்க்கப் போகும் அதிகாரம் வாய்மை. இதில் அறிஞர் சாலமன் பாப்பையாவின் உரையுடன் பார்க்கலாம்.

வாய்மை என்னும் அதிகாரம், திருக்குறளில் அறத்துப்பால் என்னும் பகுதியில், துறவறவியல் என்னும் குறள் இயலில் வருகின்றது.

வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உரை

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

உரை

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.


தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

உரை

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.


உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

உரை

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

உரை

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.


பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

உரை

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

உரை

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.


புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உரை

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

உரை

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.


யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

உரை

சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

தொகுப்பு  சிறி சரவணா