எழுதியது: சிறி சரவணா
அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.
இப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.
“கோள்” என்ற சொல்லைப் பற்றி நாம் முக்கியமாக இங்கு ஆராயவேண்டும். கோள் என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. இது, நமது சூரியத்தொகுதியின் கட்டமைப்பைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும் எமக்கு தெளிவாக்கும்.
கோள் என்ற சொல்லுக்கான விளக்கம், பல்வேறு காலங்களில், பல்வேறு மக்களால் வேறு வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது. ஆதிகால கிரேக்க மக்கள், சூரியன், நமது நிலவு என்பனவும் கோள்கள் என்று கருதினர். அதாவது மொத்தமாக, புதன், சூரியன், நிலவு, வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி என்பன அவர்களைப் பொறுத்தவரை கோள்கள். பூமி ஒரு கோள் அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்!
முதன்முதலில் சூரியனை இந்தப் பிரபஞ்சத்தின் மையப் பகுதியில் வைத்த மாதிரியை உருவாக்கியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிச்டர்சுஸ் அவர். ஆனால் அவரது கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கொப்பர்நிகஸ் தனது சூரிய மையக் கோட்பாடை ரகசியமாக வெளியிட்ட பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை மையமாக கொண்ட கருத்து வலுப்பெறத் தொடங்கியது. பின்னர் 17ம் நூற்றாண்டில் வானியலாளர்கள், தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி சூரியனே மையத்தில் இருப்பதாகவும், பூமி தொடக்கம் மற்றைய கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வருவதையும் அவதானித்து கண்டறிந்தனர். யுரேனஸ் 1781 இலும், நெப்டியூன் 1846 இலும் கண்டறியப்பட்ட கோள்களாகும்.
சீரிஸ் என்ற வான்பொருள், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருவதை வானியலாளர்கள் 1801 இல் கண்டறிந்தனர். இத்தனையும் ஒரு கோளாக அவர்கள் வகைப்படுத்தினர். அனால் பின்னர், அந்தப் பகுதியில் சீரிஸ் போன்ற நிறைய வான்பொருட்களை வானியலாளர்கள் கண்டறிந்ததன் பலனாக, பின்னர் அவற்றை எல்லாம் சேர்ந்து சிறுகோள்கள் (asteroids) என்று அழைத்தனர்.
ப்ளுட்டோ, 1930 களிலேயே கண்டறியப்பட்டது. இது சூரியனைச் சுற்றிவரும் 9 ஆவது கோளாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் ப்ளுட்டோ, புதனை விட சிறியது, அது மட்டுமல்லாது, வேறு சில கோள்களின் துணைக்கோள்களை விடவும் சிறியது. ப்ளுடோ சற்று விசித்திரமானது, அது பூமி, செவ்வாய், வெள்ளி அல்லது புதன் போல பாறைகளால் ஆனா கோள் அல்ல, அதே போல வியாழன் மற்றும் சனி போல வாயு அரக்கனும் அல்ல, மேலும் யுரேனஸ், நெப்டியூன் போல பனி அரக்கனும் அல்ல! ப்ளுட்டோவின் சரோன் துணைக்கோள், அண்ணளவாக ப்ளுடோவின் பாதியளவு. 1980 களில் ப்ளுட்டோவை கோள் என்று கருதினாலும், 90 களில் அதனைக் கோள் என்று கருதுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கான சில கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றன.
தொலைக்காட்டித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், மிகத்தொலைவில் இருக்கும், மிகச்சிறிய பொருள்களையும் துல்லியமாக கண்டறிய உதவியது. 1990 களின் ஆரம்பத்தில் வானியலாளர்கள், ப்ளுட்டோ போன்ற பல வான்பொருட்கள் சூரியனை, உளுந்துவடை போன்ற வடிவமுள்ள பகுதியில் சுற்றிவருவதை அவதானித்தனர். இது நேப்டியுனின் சுற்றுப்பாதைக்கு வெளியில் இருக்கும் இந்தப் பகுதி கைப்பர் பட்டை (Kuiper Belt) என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தான் ப்ளுட்டோவும் சூரியனச் சுற்றிவருகிறது.
கைப்பர் பட்டையும், அந்தப் பகுதியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டைப் பொருட்களினதும் (Kuiper Belt Object – KBO) கண்டுபிடிப்பு, ப்ளுட்டோவை கோள் என அழைப்பதைத் தவிர்த்து, அது ஒரு மிகப்பெரிய KBO என அழைக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர். அதன் பின்னர், 2005 இல் வானியலாளர்கள், 10 ஆவது கோளைக் கண்டறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டனர். இதுவும் ஒரு KBOதான், ஆனால் ப்ளுட்டோவை விடப் பெரியது. இப்போது எரிஸ் என அழைக்கப்படுகிறது. இது பரி பெரிய சிக்கலை உருவாகியது, அதாவது, இப்படி நாம் கண்டறியாத பல வான்பொருட்கள் இருந்தால், உண்மையிலேயே “கோள்” என்றால் என்ன? இது ஒரு சிக்கலான கேள்வியாகப் போகவே, இதற்கு இலகுவில் பதிலளிக்க முடியவில்லை.
சர்வதேச வானியல் கழகம் (international Astronomical Union – IAU), இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கான முனைந்தது. புதிதாக கண்டறிந்த KBO பொருட்களை ஒரு வகைப்படுத்தவேண்டும் என்று அவர்கள் கருதினர். அதேபோல 2006 இல், IAU, முதன்முதலில் “குறுங்கோள்” (Dwarf Planet) என்ற பதத்தைப் பயன்படுத்தி, KBOவை அழைத்தது. எரிஸ் (Eris), சீரிஸ் (Ceres), ப்ளுட்டோ (Pluto) மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா (Haumea), மக்கேமக்கே (Makemake) என்பன IAU ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுங்கோள்கள் ஆகும்.
ஆய்வாளர்கள், இன்னும் நூறுக்கும் மேற்பட்ட குறுங்கோள்கள் கைப்பர் பட்டையிலும் அதற்கு வெளியிலும் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
வானியலாளர்களும், கோள்-அறிவியலாளர்களும் முழுமனதுடன் இந்த கோள்கள், குறுங்கோள்கள் என்ற பிரிவுகளை ஆதரிக்கவில்லை. சிலர், இப்படிப் பிரிப்பது, கோள்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க என்று கருதுகின்றனர். சிலர் இந்தப் பிரிவுக்குக் காரணமான அடிப்படி எடுகோள்கள் பூரணமானவை அல்ல என்றும் கருதுகின்றனர்.
கோள்கள் என்றால் என்ன என்று இலகுவில் வரைவிலக்கணப்படுத்த பின்வருமாறு விளக்கம் தரப்படுகிறது.
போதியளவு திணிவாக இருக்கும் போது அதன் வடிவம் ஒரு கோளவடிவமாக உருவாகி இருக்கும் ஒரு இயற்கையான வான்பொருள்.
அனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு. இது ஒரு மிகவும் எளிமையான வரைவிலக்கணம். அதுமட்டுமல்லாது, கோளவடிவம் என்பது எந்தளவு துல்லியத்தன்மையாக (பூரணமான கோளவடிவமான கோள் என்று ஒன்று இல்லையே) இருக்கவேண்டும் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாது, மிகத்தொலைவில் இருக்கும் வான்பொருட்களின் கோளவடிவத்தின் துல்லியத்தன்மையை அளப்பது என்பது மிகவும் கடினம். இதுமட்டுமல்லாது, வேறு சில பல பிரச்சினைகளாலும், பல்வேறு பட்ட வானியலாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை முன்வைகின்றனர். இருந்தும் “கோள்” என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் இன்னும் பூர்த்திசெய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்!
சரி, கோள் என்ற வான்பொருளுக்கான IAU வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் என்ன என்று பார்ப்போம்.
ஒரு கோள் என்பது, பின்வரும் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று IAU கருதுகின்றது.
- ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரவேண்டும்.
- போதுமானளவு திணிவைக்கொண்டிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தைப் பெற்றிருக்கவேண்டும்.
- தனது சுற்றுப்பாதையை வேறு எந்த வான்கற்களோ இல்லை வேறு பாரிய பொருட்களோ இல்லது சுத்தம் செய்திருக்கவேண்டும்.
இந்த மூன்றாவது விதியை மீறிய வான்பொருட்களையே நாம் குறுங்கோள்கள் என்கிறோம்.
எப்படி இருந்தாலும், இன்று நாம் பல சூரியத் தொகுதிக்கு அப்பாற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம், இதன் மூலம் நம் அறிவை வளர்த்துக்கொண்டுஇருக்கிறோம். பால்வீதியில்மட்டுமே பில்லியன் கணக்கில் கோள்கள் இருக்கவேண்டும் என்று நமக்கு இன்று தெரியும், இதில் சிலவற்றில் உயிர்வாழத் தேவையாக காரணிகளும் இருக்கலாம். இந்தப் புதிய உலகங்களுக்கும் எமது “கோள்” என்ற வரைவிலக்கணம் பொருந்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.