சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?

எழுதியது: சிறி சரவணா

ஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப் பார்க்கலாம்.

சூரியகிரகணம் என்பது சூரியனது ஒளியை நமது பூமியின் சந்திரன் மறைக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு என்று இலகுவாக வரையறுக்கலாம். ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய சில பல விடயங்கள் இருக்கின்றன. சூரியன், சந்திரனோடு ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது. சூரியனது ஆரை – 695,800 km, அனால் சந்திரனது ஆரையோ வெறும் 1738 km தான். ஆக சூரியன், சந்திரனைப் போல 400 மடங்கு பெரியது. அதேபோல இன்னொரு விடயம், சூரியனுக்கும் நமது பூமிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைப் போல அண்ணளவாக 400 மடங்கு அருகில் சந்திரன் இருக்கிறது! இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து!

ஒரு சூரியகிரகணம் நடைபெற, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் மேலே குறிப்பிட்ட ஒழுங்கில் நேர்கோட்டில் வரவேண்டும். பூமியை சந்திரன் மாதமொருமுறை சுற்றிவந்தாலும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அண்ணளவாக 18 மாதங்களுக்கு ஒருமுறையே வருகிறது. இதற்கு காரணம், சந்திரனது சுற்றுகை, பூமியில் சுழற்ச்சி அச்சில் இருந்து 5 பாகை சரிவில் இருக்கிறது. ஆகவேதான் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாக வர அண்ணளவாக 18 மாதங்கள் எடுக்கிறது.

ஆனாலும் பகுதியாக சூரியனை மறைக்கக்கூடியதாக வருடத்திற்கு இரண்டு முறையேனும் சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகிறது. இந்த நிகழ்வை நாம் பகுதிச்சூரியகிரகணம் என அழைக்கிறோம். ஒரு வருடத்தில் அதிகூடியதாக 5 சூரியகிரகணங்கள் வரலாம் என கணக்கிட்டுள்ளனர்.

சூரிய கிரகணம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், சூரியகிரகணத்தில் பல்வேறு வகைகள் உண்டு.

  1. முழுச்சூரியகிரகணம் (total solar eclipse)
  2. வளையச்சூரியகிரகணம் (annular solar eclipse)
  3. பகுதிச்சூரியகிரகணம் (partial solar eclipse)

முழுச்சூரியகிரகணம்

இது சூரியனை முழுமையாக சந்திரன் மறைக்கும் போது ஏற்படுகிறது. கீழே கொடுக்கப்பட்ட படத்தை அவதானித்தால், சூரியனில் இருந்து வரும் ஒளியை சந்திரன் மறைகிறது. பூமியில் இரண்டு விதமான நிழல்கள் விழுவதை நீங்கள் அவதானிக்கலாம். பெரிய நிழலும், மையத்தில் சிறிய ஆனால் அடர்த்தியான நிழலும் தெரிகிறது இல்லையா? அந்த நடுப்பகுதியில் இருப்பவர்களுக்கு சூரியன் முழுமையாக மறைக்கப்படும். ஆகவே அந்தப் பகுதியில் இருந்து வானை அவதானிப்பவர்கள் முழுச்சூரியகிரகணத்தைப் பார்ப்பர்.

solar-eclipse-cartoon-lrg.en

முழுச்சூரியகிரகணத்தின் போது சூரியன் முழுமையாக சந்திரனால் மறைக்கப்பட, சூரியனது “வளிமண்டலமும்” அதனைச்சுற்றியுள்ள “கொரோனா” என்ற சூரியச்சுவாலைப்பகுதியும் அழகாக தெரியும். வெறும் வெற்றுக்கண்களால் கொரோனாவையும், சூரியனது நிறமண்டலத்தையும், முழுச்சூரியகிரகணத்தின் போது மட்டுமே பார்க்கமுடியும்.

முழுச்சூரியகிரகணத்தின் போது, சூரியனது கொரோனா (வெள்ளைப் பகுதி), மற்றும் நிறமண்டலம் (சிவப்புப்பகுதி) தெரிகிறது.
முழுச்சூரியகிரகணத்தின் போது, சூரியனது கொரோனா (வெள்ளைப் பகுதி), மற்றும் நிறமண்டலம் (சிவப்புப்பகுதி) தெரிகிறது.

பகுதிச்சூரியகிரகணம்

மேலே உள்ள படத்தை மீண்டும் உதரணத்திற்க்கு எடுத்துக்கொண்டால், அடர்த்தி குறைந்த பெரிய பகுதியில் விழும் நிழலில் இருப்பவர்கள், பகுதிச்சூரியகிரகணத்தைப் பார்ப்பர். அதாவது சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க முடியாமல் பகுதியாக சூரியன் மறையும்.

partial-solar-eclipse

நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, சூரியனது சிறு பகுதி சந்திரனால் மறைக்கப்படுவதை பார்ப்பதில் இருந்து, சூரியன் முழுமையாக மறைவதை பார்க்ககூடியதாக இருக்கும். அதாவது அந்த அடர்த்தியான நிழலுக்கு எவ்வளு அருகில் நீங்கள் இருகின்றீர்கள் என்பதைப் பொறுத்து.

பகுதிச் சூரியகிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பததை தவிர்க்கவேண்டும். சூரியன் மிகப்பிரகாசமான பொருள், அதனை நேரடியாக அவதானிப்பதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே பாதுகாப்பாக பார்வையிடக்கூடிய முறைகளைப் பயன்படுத்தி பார்க்கவேண்டும்.

வளையச்சூரியகிரகணம்

இது முழுச்சூரியகிரகணமும் இல்லை, பகுதிச்சூரியகிரகணமும் இல்லை. கொஞ்சம் விசித்திரமானது. முதலில் ஏன் இது வருகிறது என்று பார்த்தால், பின்னர் இது எப்படித் தெரியும் என்பது தானாக விளங்கும்.

பூமியைச் சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது, அதாவது எப்படி பூமி, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறதோ அப்படியே! சிலவேளைகளில், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சந்திரன் பூமியில் இருந்து சற்று தொலைவில் இருப்பத்தால் (நீள்வட்டப் பாதையின் காரணமாக), சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அதாவது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன மிகச் சரியாக நேர்கோட்டில் வந்தாலும், சூரியனை சந்திரன் மறைக்கும் போது, சந்திரனின் அளவு சிறிதாக இருப்பதால், சந்திரனைச்சுற்றி சூரியன் ஒரு வளையம்போல தெரியும். படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.

annular
சந்திரனைச் சுற்றி சூரியன் வளையமாக தெரிகிறது.

சரி சூரியகிரகணத்தைப் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான விடயம். இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பிறகு, பூமியில் இருந்து எம்மால் பூரணசூரியகிரகணத்தை (முழுச்சூரியகிரகணத்தை) பார்க்க முடியாது. காரணம், சந்திரன் பூமியை விட்டு ஒரு வருடத்திற்கு 2cm தூரம் விலகிக்\கொண்டே செல்கிறது.

ஆக இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பிறகு, சந்திரனால் முழுமையாக சூரியனை மறைக்கமுடியாமல் போய்விடும். ஆக இப்போது முழுச்சூரியகிரகணத்தைப் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.