நாம் இரவு வானை அவதானிக்கும் போது, விண்மீன்கள் எல்லாமே சிறிய புள்ளிகளாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறிய புள்ளிகளில் பாதிக்குப் பாதி, ஒரு விண்மீனில் இருந்துவரும் ஒளி அல்ல, மாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும்.
இரண்டுக்கு மேற்பட்ட விண்மீன்கள் சேர்ந்து பிறப்பது ஒரு பொதுவான விடயமே, ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது நாம் இதுவரை கண்டறிந்ததில் மிகத் திணிவானதும், பாரியதும், ஒன்றுக்கொன்று மிக மிக அருகில் இருக்கும் ஒரு சோடி விண்மீன்களாகும்.
பொதுவாக இரட்டை விண்மீன்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படும். அவை ஒன்றையொன்று சுற்றிவர மாதங்கள், வருடங்கள், ஏன், சிலவேளை நூற்றாண்டுகளும் ஆகலாம். ஆனால் இந்த இரட்டை விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவர வெறும் ஒரு நாளுக்குச் சற்று அதிகமான காலமே எடுக்கிறது! (பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதனை நினைவிற் கொள்க)
இந்த இரட்டை விண்மீன்கள் வழமையைவிட பெரிதாகவும் சூடானதாகவும் காணப்படுகின்றன. இந்த இரண்டு விண்மீன்களையும் ஒன்று சேர்த்தால் அவற்றின் திணிவு சூரியனின் திணிவைப் போல 60 மடங்காகும். அதுமட்டுமல்லாது அவற்றின் வெப்பநிலை 40,000 பாகையாகும்! நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை வெறும் 6000 பாகை மட்டுமே, அப்படியிருந்தும் 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் எமக்கு அந்த வெப்பத்தால் வெங்குரு (sunburn) உருவாகிறது!
நாம் இப்படியான சோடி விண்மீன்களை அதிகம் அவதானிப்பதில்லை, காரணம் இவை மிகவேகமாக நடைபெறும் செயன்முறையாகும். அதனால் அவற்றை அதற்கிடையில் கண்டறிவது என்பது மிகக் கடினமாக ஒரு செயல். வெகுவிரைவிலேயே இந்த விண்மீன்கள் பின்வரும் ஒரு வழியில் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும்: ஒன்று பாரிய சுப்பர்நோவாவாக, அல்லது அதனையும் விட உக்கிரமான காமா கதிர்வீச்சு வெடிப்பாக!
இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது, தங்கள் வாழ்கையை முடித்துக்கொள்ளும் தருவாயில் இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று தழுவிக் கொள்வதையே!
மேலதிக தகவல்
இதுவரை நாம் அவதானித்த காமா கதிர்வீச்சு வெடிப்புக்கள் எல்லாமே, பால்வீதிக்கு வெளியே மட்டுமே இடம்பெற்று உள்ளன ஆதலால் அவற்றால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. எப்படியிருப்பினும் ஒரு காமா கதிர்வீச்சு வெடிப்பு பூமிக்கு அருகில் இடம்பெற்றால், அதனால் பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும்!
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://unawe.org/kids/unawe1544/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.