வேற்றுலக இரும்பாலான ‘வெண்கலக்கால’ இரும்புக்கருவிகள்

எகிப்திய சாம்ராஜ்யத்தின் பழம்பெரும் அரசரான துட்டான்காமுனின் பட்டாகத்தி 90 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பிரசித்தி வாய்ந்த அரசனான துட்டான்காமுனின் வரலாற்றைப் போலவே அவரது கத்திக்கும்  ஒரு அதகளமான வரலாறு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற நிலையில், தற்போது அது உண்மையாகியுள்ளது. துல்லியமான எக்ஸ்கதிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்தப் பட்டாக்கத்தி செய்யப் பயன்பட்ட இரும்பு பூமிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்று கூறுகிறது.

துட்டான்காமுனின் பட்டாக்கத்தி – இதைச் செய்யப்பயன்பட்ட இரும்பு விண்கல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. (படவுதவி: University of Pisa)

அதாவது இரும்பு நிறைந்த விண்கல்லில் இருந்து இந்தக் கத்தி செய்வதற்கான இரும்பு எடுக்கப்பட்டுள்ளது – இது கடந்த வருட செய்திதான், ஆனால் தற்போது முடிவுக்கு வந்துள்ள பிரெஞ்சு ஆய்வுப்படி “வெண்கலக் காலத்தில்” (Bronze Age) செய்யப்பட்ட இரும்புக் கருவிகளில் இருக்கும் இருப்பு விண்கல்லில் இருந்து பெறப்பட்டிருக்கவேண்டும் என்கிற முடிவுக்கு கொண்டுசெல்கிறது.

வெண்கலக் காலம் எனப்படுவது, கிமு 3300 தொடக்கம் அண்மைய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்த வெண்கலப் பாவனைக்காலத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் ஆயுதங்கள், கருவிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன வெண்கலத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. உருக்கிய செப்புடன் வெள்ளீயம், ஆர்சனிக் அல்லது வேறு சில உலோகங்களை கலந்ந்து வெண்கலம் உருவாக்கப்பட்டது. நீடித்து உழைக்கக் கூடியதும் இலகுவாகக் கையாளக்கூடியதுமாக இருந்ததினால் அடுத்த 2000 ஆண்டுகளுக்கு பிறகு இருப்புக் காலம் உருவாகும் வரை வெண்கலமே பெரும்பாலும் பயன்பட்டது.

வெண்கலக் காலம் என்றால் வெறும் வெண்கலக் கருவிகளே அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று கருத்தில் கொள்ளத்தேவையில்லை. வெண்கலக் காலத்தைச் சேர்ந்த சில அரிதான இரும்புக் கருவிகள், ஆயுதங்களையும் நாம் கண்டுபிடித்துள்ளோம். இந்தக் கருவிகள் “இரும்புக் காலத்திற்கு” (Iron Age) பல நூறு வருடங்கள் முற்பட்டவை. வெண்கலக் காலத்தில் பெரிதாக இரும்பைப் பயன்படுத்தாதற்குக் காரணம், இரும்பு பெரும்பாலும் உலோகத் தாதாக காணப்பட்டது. தாதை அதிகூடிய வெப்பநிலையில் உருக்கி இரும்பை பிரித்து எடுப்பதற்கான தொழில்நுட்பம் அக்காலகட்டத்தில் காணப்படவில்லை.

எனவே அக்கால இருப்புக் கருவிகளுக்கான இரும்பு எங்கிருந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சிந்தித்தனர்.

நீண்ட காலமாகவே வெண்கலக்கால இரும்புக் கருவிகள் விண்கல்லில் இருந்து கிடைக்கப்பெற்ற இருபினால் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகோள் ஒன்றை வைத்திருந்தனர். இதற்குக் காரணம், பூமியில் காணப்படும் உலோகத் தாது போலல்லாமல், விண்கல்லில் இருந்து கிடைக்கபெறும் இரும்புசுத்தமாகக் காணப்படும். அதனால் அதனைப் பயன்படுத்தி கருவிகளை உருவாகுவது இலகுவாக இருந்திருக்கும்.

விண்கற்களில் இருந்து பெறப்பட்ட இரும்பிலே இந்தக் கருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால், குறைந்தளவிலேயே கிடைத்திருக்கும் இரும்பைக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கருவிகளுக்கு அறிதானதாகவும் மிக விலை உயர்ந்ததாகவும் காணப்பட்டிருக்கும்.

வெண்கலக்கால இரும்புக் கருவிகள் உண்மையிலேயே விண்கற்களில் இருந்து பெறப்பட்ட இரும்பால் தான் உருவாக்கப்பட்டத்தா என்பதை உறுதிப்படுத்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞான ஆய்வுக்கான தேசிய நிலையத்தைச் சேர்ந்த Albert Jambon பலவகையான வெண்கலக்கால இரும்புக் கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார். இதில் கிமு 1330 ஐச் சேர்ந்த துட்டான்காமுனின் கத்தி, கைச்சங்கிலி மற்றும் தலையணி, கிமு 1440 காலப்பகுதியைச் சேர்ந்த சிரியா மற்றும் சீனாவில் இருந்து பெறப்பட்ட கோடாலிகள், கிமு 2400 ஐச் சேர்ந்த துருக்கி குத்துவாள், மேலும் கிமு 3200 வரையான காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிறய இரும்புக் கருவிகள் உள்ளடங்கும்.

X-ray fluorescence spectrometer எனபப்டும் கருவியைப் Jambon பயன்படுத்தினார். இந்தக் கருவி ஆராயப்படும் பொருளை சேதப்படுத்தாமல் அப்பொருளில் இருக்கும் மூலகங்களில் விகிதத்தை எமக்குத் தெரியப்படுத்தும். Jambon இந்த விகிதங்களை ஆய்வு செய்து, பூமியில் இருந்து குறித்த இரும்பு வந்திருக்குமா இல்லை விண்கல்லில் இருந்து வந்திருக்குமா என்று கணக்கிட்டார். விண்கல்லில் இருக்கும் இரும்பில் அதிகளவில் நிக்கல் மற்றும் கோபால்ட் காணப்படும், அனால் பூமியில் கிடைக்கும் இரும்பில் இதன் அளவு குறைவு.  கரணம் நிக்கலும் கோபால்ட்டும் உருகிய பூமியின் மையத்தை நோக்கிச் சென்றுவிடும்.

ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட இரும்பாலான விண்கற்களில் காணப்படும் விகிதத்திற்கு சமமான விகிதத்தில் வெண்கலக் கால இரும்புக் கருவிகளில் உள்ள இரும்பும் இருப்பதால், இவற்றைச் செய்யப் பயன்பட்ட இரும்பு விண்கற்களில் இருந்து வந்திருக்கவேண்டும் என்பது முடிவாகியது.

ஆகவே, முதன் முதலில் கிமு 1200 களில் பூமியில் தாதாக கிடைக்கும் இரும்பை உருக்கி அதிலிருந்து கருவிகளை செய்யத் தொடங்கிய “இரும்புக் காலத்தின்” தொடக்கத்திற்கு முன்னர் பயன்பட்ட இரும்புக் கருவிகள் வேற்றுலக இரும்பால் உருவானவை என்கிற உண்மை எமக்குப் புலப்படுகிறது.

தகவல்: CNRS, Journal of Archaeological Science