பாலூட்டிகள் இந்தக் கோளத்தை ஆக்கிரமிக்க முன்னர் வாழ்ந்த உயிரினங்கள் விசித்திரமானவையும், கற்பனைக்கு அப்பாற்பட்டவையுமாக காணப்பட்டுள்ளன. குட்டி டைனோசர்களை கபளீகரம் செய்த மெகா தவளைகள் தொடக்கம், 45 அடி நீளமான இறக்கை கொண்ட பறக்கும் டைனோசர் வரை, அக்கால உலகம் பல புதிர்களைக் கொண்டிருந்திருக்கவேண்டும். தற்போது ஒவ்வொன்றாக நாம் அதனை மீண்டும் மீட்டிக்கொண்டு இருகின்றோம்.
இப்போது சிந்திக்கும் போது எமக்கு இந்த டைனோசர்களும் அக்கால விலங்குகளும் விசித்திரமாகத் தெரியலாம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்திருந்தால் எம்மைப்பார்த்து டைனசோர்கள் விசித்திர ஜந்துகள் என்றும் நினைத்திருக்கலாம்.
சரி, தொல் உயிரியலாளர்களின் தற்போதைய கண்டுபிடிப்பு என்னவென்றால், அன்னம், பெங்குவின், முதலை மற்றும் வேலோசிரப்டர் (அதான் ஜுராசிக் பார்க் படத்தில் சின்ன சைஸ்ல ரெண்டு கால்ல வேகமா ஓடி எல்லோரையும் துரத்துமே வில்லன் அதேதான்) இவை அனைத்தையும் கலந்துகட்டி அடித்து ஒரு சாம்பாராக புதியவொரு டைனோசர் வாழ்ந்துள்ளது என்பதே!
75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Halszkaraptor escuilliei எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசரின் எச்சங்கள் மொங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர்கள் தெரொபோட் எனப்படும் இரண்டு கால் மாமிச உண்ணி வகையச் சார்ந்தது. 160 மில்லியன் வருடங்களாக இந்த வகை டைனோசர்கள் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருந்து ஆட்சிபுரிந்தவை.
ஆனால் இந்தக் குறித்த டைனோசர் மாற்றிய தெரொபோட்களை விட சற்றே விசித்திரமாக காணப்படுகிறது. அன்னம் போன்ற நீண்ட கழுத்து, வாத்தின் இறகுகள் போன்ற கைகள், வேலோசிரப்டோர் போல மிககூரிமையான கால் நகங்கள் என்று எல்லா உயிரினங்களையும் கலந்துகட்டி இந்த டைனோசர் இருந்துள்ளது. இந்தக் உடல் கட்டமைப்பைப் பார்க்கும் போது இந்த டைனோசர் நிலம் மற்றும் நீரிலும் வேட்டையாடி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
இதன் புதைபடிவத்தை சிதைக்காத வண்ணம் multi-resolution X-ray microtomography எனும் தொழில்நுட்பத்தை தொல்உயிரியலாளர்கள் பயன்படுத்தி இந்த டைனோசரின் புதைபடிவத்தை ஆய்வு செய்துள்ளனர். இவர்களுக்கு இருந்த முதல் சந்தேகம் இந்த எல்லா எலும்புகளும் ஒரே உயிரினத்தின் எலும்புகளா என்பதுதான். ஸ்கேன் முடிவில் இந்த எல்லாம் எலும்புகளும் ஒரே டைனோசரின் எலும்புகள் என்பது தெரியவந்தது.
வாத்து ஒன்றைப் போல நிலத்தில் இந்த டைனோசர் அலைந்து திரிந்திருக்க வேண்டும். அதன் புடைத்த இறகுகள் நிறைந்த கைகளைக் கொண்டு நீரில் நீந்தியிருக்கவேண்டும்.
மேலும், முதலைகளுக்கு இருப்பது போன்ற இரத்த நரம்புகள் இதன் முகவாயில் இருப்பதையும் ஸ்கேன் மூலம் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த டைனோசரை ரேப்டர் வகை டைனோசர் இனமாக இனம்பிரித்துள்ளனர்.