மோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்

கதிரியக்க கழிவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது எவ்வளவு ஆபத்தானது என்றும் எமக்குத் தெரியும். சாதாரண டாக்டராக இருந்தவரை ‘ஹல்க்’ ஆக மாற்றியது கதிரியக்கம் தானே!

உண்மையில், கதிரியக்கம் என்பது அணுத்துணிக்கைகள் அல்லது மூலக்கூறுகள் வெளியேற்றும் ‘கதிர்வீச்சு’ எனப்படும் சிறிய துணிக்கைகள் அல்லது சக்தி ஆகும்.

நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் சிறியளவு கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம். பாறைகள், கண்ணாடி, மற்றும் வாழைப்பழங்கள் கூட இயற்கையாக சிறிதளவு கதிரியக்கம் கொண்டுள்ளன. ஆனால் எம்மை தாக்கும் அளவிற்கு இவை வீரியம் கொண்டவை அல்ல. வைத்தியசாலைகளில் நோய்களைக் கண்டறியவும் குணப்படுத்தவும் கதிரியக்கம் பயன்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான தொன் எடையுள்ள கதிரியக்க கழிவுகள் அணு உலைகளால் ஒவ்வொரு வருடமும் வெளியேற்றப்படுகின்றன.

பூமியில் மட்டுமில்லாது விண்வெளியிலும் கதிரியக்க பொருட்கள் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக எமது பால்வீதியில் இப்படியான கதிரியக்க பொருட்கள் சிதறிக் கிடப்பதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் எப்படி இவை இங்கே வந்தது என்பது ஒரு மாபெரும் புதிராகவே சற்று முன்வரை இருந்தது எனலாம்.

படவுதவி: ALMA (ESO/NAOJ/NRAO), T. Kamiński & M. Hajduk; Gemini, NOAO/AURA/NSF; NRAO/AUI/NSF, B. Saxton

மேலே உள்ள படத்தை பார்த்தால் சற்றே தெளிவில்லாதது போல இருக்கலாம். ஆனால் நீங்கள் பார்ப்பது மிகப்பெரிய விண்வெளி மோதலின் எச்சத்தை.

பல வருடங்களுக்கு முன்னர் நமது சூரியன் போன்ற இரண்டு விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டன. அப்போது அவற்றில் இருந்து பெருமளவான பொருட்கள் விண்வெளியில் வீசி எறியப்பட்டது (ஆரெஞ்சு நிறத்தில் இருப்பவை). ஒரு விண்மீன் மட்டுமே எஞ்சியது. இந்தப் பாரிய வெடிப்பு உருவாக்கிய பிரகாசத்தால் பல மாதங்களுக்கு இரவுவானில் ஒரு பிரகாசமான விண்மீனைப் போல இந்த வெடிப்பு தென்பட்டது.

இரண்டு விண்மீன்கள் மோதுவது என்பது மிக, மிக அரிதாக நடைபெறக்கூடிய விடையம். ஆனாலும் அதைத் தாண்டியும் விண்ணியலாளர்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்பட வைத்தது என்றால் அதற்குக் காரணம் இந்த வெடிப்பைச் சுற்றி ஒளிரும் பொருட்களாக தென்படுவது கதிரியக்க செயற்பாடு கொண்ட பொருட்களாகும்!

இதுவே கதிரியக்க மூலப்பொருட்கள் முதன் முதலாக நேரடியாக விண்வெளியில் அவதானிக்கப்படும் சந்தர்ப்பமாகும். குறிப்பாக இது கதிரியக்க செயற்பாடு கொண்ட அலுமினியமாகும். நாம் தகடு, சீடிக்கள், பைக் கைப்பிடிகள் என்பவற்றை செய்யப் பயன்படுத்தும் அதே அலுமினியம் தான்.

நமது விண்மீன் பேரடையில் மூன்று சூரியன் அளவுள்ள கதிரியக்க அலுமினியம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு பால்வீதியில் இருக்கும் கதிரியக்க அலுமினியத்தில் சில விண்மீன்கள் மோதும் போது உருவாகின்றன என்று எமக்கு உணர்த்துகின்றன. ஆனாலும் விண்மீன் மோதலின் போது உருவாகிய அலுமினியத்தின் அளவு மிகக் குறைவு என்பதால் வேறு ஒரு செயன்முறையும் இப்படியான கதிரியக்க அலுமினியத்தை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலதிக தகவல்

கதிரியக்க செயற்பாடு கொண்ட மூலப்பொருட்கள் கதிர்வீச்சை வெளியிடுவதால் ஒரு கட்டத்தில் அவை வேறு மூலப்பொருட்களாக மாற்றமடையும். இந்த கதிரியக்க அலுமினியமும் ஒரு கட்டத்தில் மக்னீசியம் எனும் மூலகமாக மாறிவிடும். மக்னீசியம் பல உணவுப்பொருட்களில் காணப்படுவதுடன் எமது உடல் ஆரோக்கியத்தை பேணவும் அவசியமாகும்.