இந்த விண்வெளியில் உலாவும் டையமண்ட் கல்லின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிட்டுள்ளனர். வடிவம் தான் டையமண்ட், ஆனால் இந்த 162173 Ryugu சிறுகோள் பெரும்பாலும் நிக்கல் மற்றும் இரும்பால் உருவாகியுள்ளது. பல காரணங்களுக்காக எமக்கு இந்த சிறுகோளில் ஆர்வமுண்டு.
முதலாவது, இது பூமிக்கு அருகில் பயணிக்கும் ஒரு சிறுகோள். எனவே தொலைவில் உள்ள எதிர்காலத்தில் இது பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
அருகில் உள்ள எதிர்காலத்தில் நாம் இதற்கு விண்கலங்களை அனுப்பி இங்கிருக்கும் மூலப்பொருட்களான நிக்கல் மற்றும் இரும்பை அகழ்ந்து எடுக்கமுடியும். இதன் மூலம் எமக்கு புதிய பயனுள்ள மூலப்பொருள் முதல்கள் கிடைக்கும்.
அடுத்தது, எமது சூரியத் தொகுதி பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எப்படி உருவாகியது என்கிற ரகசியமும் இந்த சிறுகோளில் மறைந்திருக்கிறது. இதனால் பல விஞ்ஞானிகளும் இந்தச் சிறுகோளில் ஆர்வம் காட்டுகின்றனர். இது பூமிக்கு மிக அருகில் சுற்றுவதன் காரணம் என்ன?
கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஹயபூசா 2 விண்கலம் இந்த ஒரு கிமீ அகலமான சிறுகோளை சென்றடைந்தது. இந்தப் படத்தில் எம்மால் இந்தச் சிறுகோளில் இருக்கும் பாறைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்ககூடியதாக இருக்கிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு ஹயபூசா இந்த சிறுகோளில் பல ஆய்வுகளை செய்யும். இது கொண்டு சென்ற சிறிய தளவுலாவி இந்தச் சிறுகோளில் இறங்கி கங்காரு போல பாய்ந்து பாய்ந்து சென்று ஆய்வுகளை செய்யும்.
முக்கியமான விடையம், ஹயபூசா 2 இந்தச் சிறுகோளில் சிறிய பகுதியை அகழ்ந்து எடுத்துக்கொண்டு மீண்டும் பூமி திரும்பும்!
நன்றி: நாசா
படங்கள்: ISAS, JAXA