சீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்

சீன ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது தூயசக்தி உற்பத்தி மற்றும் பாவனையில் அடுத்த மைல்கல்லை அடைய முதல் படியாக இருக்கும்.

அணுக்கரு இணைவு (fusion) மூலம் சக்தியை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. சூரியனின் மையத்தில் இருக்கும் அழுத்தத்தால் அங்கே 15 மில்லியன் பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உருவாகிறது, இந்த வெப்பத்தின் காரணமாக அங்கே இருக்கும் ஹைட்ரோஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மிக வேகமாக மோதி இரண்டின் அணுக்கருவும் இணைந்து ஹீலியம் அணுவை உருவாக்குகிறது, இதன் போது வெளிவரும் சக்தியே சூரியனில் இருந்துவரும் வெப்பமும், ஒளியும். சூரியனின் மையப்புள்ளியை நோக்கிய ஈர்ப்புவிசை சமச்சீராக கோளவடிவத்தில் உள்நோக்கிய அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் மூலமே சூரியனில் அணுக்கரு இணைவு சாத்தியமாகிறது.

இப்படி சிந்தித்துப் பாருங்கள், பலூன் ஒன்றை ஊதி, கைகளுக்குள் வைத்து அதனை நசுக்கினால் நிச்சயம் கைகளின் இடைவெளிகளினூடாக அங்கங்கே பலூனின் பகுதிகள் வெளிவரும். இதற்குக் காரணம் வெளியே இருந்து அழுத்துவதால்தான். ஆனால் உள்ளே இருந்து பலூனை இழுத்தால்? எல்லாப்பக்கங்களிலும் இருந்து சமான விசையைக் கொண்டு இழுத்தால் சமச்சீராக பலூன் உள்நோக்கி சுருங்கும் அல்லவா? அதனைத்தான் திணிவின் காரணமாக ஈர்ப்புவிசையும் செய்கிறது.

ஆனால் இதே செயற்பாட்டை பூமியில் உருவாக்குவது என்பது சுலபமல்ல.

இரண்டு அணுக்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு அவற்றை மிக மிக வேகமாக ஒன்றையொன்று நோக்கி எறியவேண்டும், அல்லது இரண்டு அணுக்களையும் மிக அதிக சக்தி கொண்டு நசுக்கவேண்டும்.

சீன ஆய்வு கூடத்தில் ஒன்றை ஒன்று வேகமாக மோதவைத்து அணுக்கரு இணைவை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். ஆனால் சூரியனைப் போல ஈர்ப்புவிசை இங்கே உள்நோக்கி தொழிற்படாது என்பதால் சூரியனின் உள்ளக வெப்பநிலையை விட அதிகளவான வெப்பநிலையை இங்கே உருவாக்கவேண்டும். அண்ணளவாக சூரியனின் 15 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையைப் போல ஏழு மடங்கு வெப்பநிலை. அதுமட்டுமல்லாது, இந்த வெப்பநிலையை ஹைட்ரோஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்வரை வைத்திருக்கவேண்டும். இதனை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளனர்.

சீனாவின் Experimental Advanced Superconducting Tokamak

இதற்கு முன்னர் ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்கள் இப்படியான செயற்கை முறையைக் கொண்டு ஹீலியத்தை 40 மில்லியன் பாகை செல்சியஸ் வரை உயர்த்தினர். ஆனாலும் அவர்களது மின்காந்த சுருள் தொழில்நுட்பத்தால் அவ்வளவு வெப்பநிலை மட்டுமே சாத்தியமாயிற்று.

ஆனால் சீன விஞ்ஞானிகள் ஒரு முறையைப் பயன்படுத்தி மட்டும் ஹைட்ரோஜன் பிளாஸ்மாவை வேப்பப்படுத்தாமல், பல முறைகளை ஒன்றிணைத்து 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைந்துள்ளனர்.

தூய சக்திமுதல் உருவாக்கத்தில் செயற்கை அணுக்கரு இணைவு (fusion) மிக முக்கய பங்காற்றும், அதற்கு இது முதற்படியாக இருக்கும்.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

#parimaanam #sciencepanda

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam