கொஞ்ச காலம் முன்னர் வரை ஒன்பதாவது கோள் அந்தஸ்தில் இருந்த புளுட்டோ தற்போது குறள்கோள் (dwarf planet) என வகைப்படுத்தப்படுகிறது. நீல வானம், மலை மேடுகள், பனிப்பாறைகள் என்று பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்டு காணப்படும் புளுட்டோ ஏன் கோள் இல்லை என்பதை முதலில் பார்ப்போம்.

2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோள் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை விதி அல்லது கோட்பாடு இருக்கவில்லை. ஒரு விண்மீனைச் சுற்றி வரும் பாரிய பொருட்கள் எல்லாம் கோள்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் இதில் இருந்த சிக்கல் ஒரு விண்மீனைச் சுற்றி பல பொருட்கள் இப்படிச் சுற்றி வருகின்றன. வால்வெள்ளிகள், விண்கற்கள் என்று பல எனவே விண்மீனைச் சுற்றி வரும் ஓரளவு பாரிய பொருளை நாம் கோள் என்று எடுத்துக்கொண்டோம்.

ஆனால் ஓரளவு பாரிய விண்பொருட்கள் சூரியனைச் சுற்றிவருவதை நாம் புதிதாகக் கண்டுபிடிக்க சிக்கல் தொடங்கியது எனலாம். சீரீஸ், எரிஸ், மேக்மேக், ஹவ்மியா போன்ற பலவற்றின் கண்டுபிடிப்பு கோள் என்றால் என்ன என்கிற வாதத்தை தொடங்கிவைத்தது. அது இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது வேறு கதை. ஆனால் 2006 இல் சர்வதேச விண்ணியல் கூட்டம் கோள் என்றால் பின்வரும் மூன்று அடிப்படை விடையங்களை செய்யவேண்டும் என்று ஒருமித்த முடிவுக்கு வந்தது. எனவே ஒரு பொருளை கோள் என்று கூறவேண்டும் என்றால் அது பின்வருவனவற்றை செய்யவேண்டும்.
- ஒரு விண்மீனைச் சுற்றிவரவேண்டும்.
- ஈர்ப்புவிசை மூலம் தன்னை ஒரு கோள வடிவமாக்கிக்கொள்ளும் அளவிற்கு அதன் திணிவு இருக்கவேண்டும்.
- அதனது விண்மீனைச் சுற்றிய பயணப்பாதையில் இருக்கும் வேறு பலரையும் தனது ஈர்ப்புவிசை கொண்டு வெளியே வீசி எறியுமளவிற்கு பெரிதாக இருக்கவேண்டும்.
முதலாவது மற்றும் இரண்டாவது விதி பொருந்தி மூன்றாவது விதி பொருந்தாதவற்றை ‘குறள்கோள்’ என வகைப்படுத்தியுள்ளனர். புளுட்டோவும் ஒரு குறள்கோள் தான். இது சூரியனைச் சுற்றிவரும் பிரதேசம் கைப்பர் பட்டி என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் நாம் புளுட்டோ போல வேறு பல குறள்கோள்களையும் தற்போது கண்டறிந்துள்ளோம்.
புளுட்டோ 1930 இல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 11 வயதுக் குழந்தையால் பெயர் வைக்கப்பட்ட ஒரே கோள் புளுட்டோ தான். வேநிட்டா பெர்னி என்கிற அந்தப் பெண் அவரின் பாட்டனாரிடம் நிலத்தடி உலகின் ரோமக் கடவுளான புளுட்டோவின் பெயரை இந்தக் கோளிற்கு வைக்குமாறு கோர அவரும் புளுட்டோவை கண்டறிந்த லோவெல் அவதானிப்பகத்திற்கு கடிதம் எழுதினார். இறுதியில் அந்தப்பே பெயரையே அவர்களும் புதிதாக கண்டுபிடித்த அந்த விண்பொருளுக்கு வைத்துவிட்டனர்.
நமது நிலவை விடச் சிறியதான புளுட்டோவிற்கு ஐந்து துணைக்கோள்கள் உண்டு. அதில் பெரியது சாரோன் (Charon). இதில் காமடி என்னவென்றால் சாரோன் அண்ணளவாக புளுட்டோவின் அளவில் பாதி இருக்கும்!

புளுட்டோ அண்ணளவாக 2380 கிமீ விட்டம் கொண்டது. இது பூமியின் நிலவின் விட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு தான். அல்லது ஐக்கிய அமெரிக்காவின் அளவில் பாதி என்றும் கூறலாம்.
சூரியனைச் சுற்றிவரும் சராசரித் தூரம் 5.8 பில்லியன் கிலோமீட்டர்கள். இது பூமி சூரியனைச் சுற்றிவரும் தொலைவைக் காட்டிலும் 39 விழுக்காடு அதிகம் (39 AU). எனவே சூரியனில் இருந்து ஒளி புளுட்டோவை அடைய 5.5 மணித்தியாலங்கள் எடுக்கும்.
புளுட்டோவின் சூரியனைச் சுற்றிய பயணப்பாதை ஏனைய கோள்களை விட சற்றே வித்தியாசமானது. சற்றே சரிவான மிக நீள்வட்டமான பாதை அது. எனவே நீள்வட்டப் பாதையின் தொலைவில் இருக்கும் போது சூரியனுக்கும் புளுட்டோவிற்கும் இடையிலான தூரம் 49.3 AU ஆகவும், நீள்வட்டப்பாதையின் குறுகிய இடத்தில் இருக்கும் போது சூரியனுக்கும் புளுட்டோவிற்கும் இடையிலான தூடம் 30 AU ஆகவும் காணப்படும்.

இந்த மிக நீண்ட நீள்வட்டப்பாதையை கருத்தில் கொண்டால் 1979 தொடக்கம் 1999 வரை புளுட்டோ நேப்டியுனை விட சூரியனுக்கு அண்மையில் இருந்தது!
புளுட்டோவின் ஒரு வருடம் என்பது 248 பூமி வருடங்கள். அதேபோல புளுட்டோவின் ஒரு நாள் என்பது 153 மணித்தியாலங்கள் நீளமானது. அண்ணளவாக இது 6 பூமி நாட்கள்.
புளுட்டோவிற்கு நைதரசன், மீதேன் மற்றும் கார்பன் மோனோ ஆக்சைட் ஆகிய வாயுக்கலவையால் உருவான மெல்லிய வளிமண்டலம் உண்டு. இந்த வளிமண்டலம் பார்க்க மெல்லிய நீலநிறமாகவும் காட்சியளிக்கிறது.

சனிக்கு இருப்பதுபோல புளுட்டோவிற்கு எந்தவொரு வளையங்களும் இல்லை. குறிப்பாக வெளிச் சூரியக் குடும்ப கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் அனைத்திற்கும் சிறிதோ பெரிதோ வளையங்கள் இருக்கின்றன. ஆனால் இதில் புளுட்டோவும் ஒரு விதிவிலக்கு.
2015 இல் நாசாவின் நியு ஹொரைசன் விண்கலம் ஒன்றுதான் புளுட்டோவிற்கு அருகில் சென்று ஆய்வு செய்த ஒரே விண்கலம்.
புளுட்டோ சூரியனுக்கு மிகத் தொலைவில் இருப்பதால் இதன் மேற்பரப்பு வெப்பநிலை -228 பாகை செல்சியஸ் தொடக்கம் -238 பாகை செல்சியஸ் வரை காணப்படுகிறது. நாமறிந்து உயிர் தோன்றவோ, வாழவோ முடியாத வெப்பநிலை வீச்சு இது.
புளுட்டோ பற்றி நாம் அறிந்தது வெகுகுறைவே. எதிர்கால ஆய்விகள் இதன் தோற்றம் மற்றும் கட்டமைப்பு பற்றி நாம் சிந்தித்திராத மேலும் பல தகவல்களைச் சொல்லலாம்.
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
#parimaanam #sciencepanda
⚡ https://parimaanam.net
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam