சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.
HR 8799 எனும் விண்மீனைச் சுற்றி HR 8799 b, c, d, e என நான்கு கோள்கள் சுற்றிவருவதை நாம் அவதானிக்கிறோம். நமது சூரியனைப் போலல்லாமல் இந்த விண்மீன் வெறும் 30 மில்லியன் ஆண்டுகளே வயதானது. எனவே இதனைச் சுற்றி பல்வேறுபட்ட செயற்பாடுகள் இன்னும் இடம்பெற்றுக்கொண்டே இருகின்றன.
ஒரு விண்மீனைச் சுற்றி கோள்கள் கண்டறியப்படும் போது அவற்றுக்கு அந்த விண்மீனின் பெயரோடு சேர்த்து ஆங்கில எழுத்தின் இரண்டாவது எழுத்தில் இருந்து பெயர்வைக்கப்படும். எனவே HR 8799 ஐ சுற்றிவரும் முதலாவது கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 b என்றும், அடுத்ததாக கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 c என்றும் பெயர் வைக்கப்படும்.
2008 இல் விஞ்ஞானிகள் HR 8799 ஐச் சுற்றிவரும் மூன்று கோள்களை கண்டறிகின்றனர். முறையே இவற்றுக்கு HR 8799 b, c, d என பெயர் வைக்கப்படுகிறது. 2010 இல் இன்னும் ஒரு கோள் புதிதாக கண்டறியப்படுகிறது; இதற்கு HR 8799 e என பெயரிடப்படுகிறது.
தற்போதைய நீர் சம்பந்தமான கண்டுபிடிப்பு HR 8799 c கோளைப் பற்றியது. நமது வியாழனைப் போல ஏழு மடங்கு திணிவான இந்தக் கோள் அதன் தாய் விண்மீனை ஒவ்வொரு 200 வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிறது. தற்போதைய நேரடி அவதானிப்பு இந்தக் கோளின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளை பெரும்பாலும் இப்படியான கோள்களில் காணப்படும் மீதேன் இங்கு இல்லாததையும் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது.
இதற்கு முன்னர் பல கோள்கள் நேரடியாக தொலைநோக்கி கொண்டு படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலில் கோள் தொகுதியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
புதிய adaptive optics தொழில்நுட்பத்தை பயன்படுத்தியால் இந்த நேரடி அவதானிப்பு சாத்தியமாகியுள்ளது.
என்னதான் நீர் இருப்பது தெரிந்தாலும், இந்த தொகுதியில் இருக்கும் ஒரு கோளும் நமது சூரியத்தொகுதியில் இருக்கும் கோள்களைப் போலன்று என்று இதனை அவதானித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறனர்.
எதிர்கால தொலைநோக்கிகள் இன்னும் துல்லியமாக கோள்களை படம்பிடிக்க உதவுவதுடன் அந்தக் கோள்களின் கட்டமைப்பு, வளிமண்டலம் மற்றும் இயக்கமுறைகளையும் தெளிவாக அவதானிக்க உதவும்.
நன்றி: universetoday.com
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam