நிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன?

மத்திய மற்றும் தென் அமேரிக்கா பிரதேசத்தில் காணப்படும் குரங்கு இனத்தில் ஒன்று உடல்முழுதும் அடர்த்தியான் கருப்புநிற முடி காணப்படும். Alouatta palliata என்கிற இந்தவகைக் குரங்குகளை நீங்கள் தென் அமேரிக்க, மற்றும் மத்திய அமெரிக்க காடுகளில் எங்கே பார்த்தாலும் கருப்புநிறமாகவே இருக்கும். ஆனால் கோஸ்டா ரிக்கா நாட்டில் அப்படி இல்லை!

கடந்த ஐந்துவருடங்களில் கோஸ்டா ரிக்காவில் இருக்கும் இந்த வகை குரங்குகளின் முடியில் பிரகாசமான மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். ஆரம்பத்தில் வாலில், கைகளில் உள்ள முடிகள் மஞ்சள் நிறமாக மாறினாலும், காலப்போக்கில் இந்த மஞ்சள் நிறமும் பாதிக்கப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

படவுதவி: Ismael Galvan

இதுவரை மஞ்சள் நிறமாக முடி மாறிய 21 குரங்குகளை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். மேலும் சில குரங்குகளின் உடலில் கருப்பு முடி எங்கே இருக்கிறது என்று தேடுமளவிற்கு மஞ்சள் நிற முடி நிரம்பியுள்ளது. சில குரங்குகள் முழுதாக மஞ்சள் நிறமாக மாறிவிட்டன.

இதற்கு எல்லாம் காரணம் என்ன?

பல காலமாக விஞ்ஞானிகளையே குழப்பத்தில் ஆழ்த்திய விடையம் தான் இது, ஏனென்றால் இப்படியொரு நிறமாற்றத்தை நாம் வேறு எங்கும் இதுவரை பார்த்ததில்லை. தற்போது இந்த மாற்றத்திற்கு காரணம் கோஸ்டா ரிக்காவின் வயல்வெளிகளில் பயன்படும் பூச்சிகொல்லிகள் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

முடி மற்றும் தோலின் நிறத்திற்கு மெலனின் எனும் நிறமியே காரணம். இதில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப பல நிறங்களையும் இது உருவாக்கும். பொதுவாக இந்த கருப்பு நிறக் குரங்குகளில் இயுமெலனின் எனும் நிறமி அதிகளவில் இருப்பதால் இதன் முடி கருப்பு, சாம்பல் அல்லது தடித்த பிரவுன் நிறத்தில் காணப்படுகிறது.

ஆனால் மஞ்சள் நிறமாக முடி மாறிய குரங்குகளை ஆய்வு செய்ததில் இவற்றில் இருந்த மெலனின் பியோமெலனின்னாக விகாரமடைந்துள்ளது. இது மஞ்சள், சிவப்பு அல்லது ஆராஞ்சு நிற முடி, தொலை உருவாக்கக்கூடியது.

இப்படியான விகாரத்தை நாம் வேறு பாலூட்டிகளில் பார்த்ததே இல்லை. இது முரண்பாடானது என்று இங்கே ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகள் கூறுகிறனர். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நூறுவீதம் சரியாக கண்டறியமுடியாவிட்டாலும், பூச்சிகொல்லிகள் தான் இதற்குக் காரணம் என்று இவர்கள் கருதுகின்றனர்.

இப்படிக் கருதக் காரணம், இந்த மஞ்சள் நிறமாக மாறிய குரங்குகள் அதிகம் காணப்படுவது, பூச்சிகொல்லிகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பண்ணைகளுக்கு அருகில்தான். இங்கே சல்பர் அதிகளவில் கலந்த பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகிலேயே அதிகளவு பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவது கோஸ்டா ரிக்கா பண்ணைகள் தான் என்று வேறு ஒரு ஆய்வு கூறுகிறது! அண்ணளவாக அறுவடை செய்யும் ஒரு கெக்டையர் நிலத்திற்கு 25 கிலோகிராம் பூச்சிகொல்லி என்று இவர்கள் போட்டுத் தாக்குகிறார்கள்!

இந்தக் குரங்குகள் பெரும்பாலும் இந்த பண்ணை நிலங்களுக்கு அருகில் இருக்கும் மரங்களின் இலைகள், பழங்கள் என்பவற்றை உண்பதால் அதிகளவு சல்பர் இவற்றின் உடலில் கலந்திருக்கலாம். அதிகளவு சல்பர் இவற்றின் மெலனின் நிறமியை பாதித்து இந்த நிறமாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.

ஆகவே ரசயானப் பாவனையால் பாதிக்கப்பட்ட பல அங்கிகளில் லேட்டஸ்ட் இந்தக் குரங்குகள் தான். அவை கருப்பு நிறத்தில் இருப்பது அவற்றை வேட்டையாடும் விலங்குகளின் கண்களில் இருந்து மறைய உதவியது. பிரகாசமான மஞ்சள் நிறம் இலகுவாக இவை வேட்டையாடப்பட உதவிடும்.

இந்த பூச்சிகொல்லிகள் தான் இந்த மாற்றத்திற்குக் காரணமா என்று இன்னும் ஆய்வுகள் செய்யப்பட்டு செய்யப்படவேண்டும், ஆனால் இந்தக் குரங்குகளில் பரிணாமவளர்ச்சி எம்மால் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam