செவ்வாயில் புதைந்துள்ள ரகசியம் தேடி

சுருக்கமாக இன்ஷ்டாகிராம்மில் தேடினால் 350 மில்லியன் புகைப்படங்கள் செல்பி எனும் ஹெஷ்டேக் உடன் பதிவேற்றப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் இந்த புகைப்படங்களை எல்லாம் மிஞ்சிவிடும் அளவிற்கு இந்த வாரத்தில் நாசாக்கு கிடைத்த செல்பி செவ்வாயில் இருந்து இன்சைட் தரையிறங்கி அனுப்பியது!

நவம்பர் 26 இல் இன்சைட் செவ்வாயில் தரையிறங்கிய சொற்ப காலத்தினுள் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்சைட் ஆறு மாத காலம் பயணம் செய்து செவ்வாயை அடைந்தது. இந்தப் படத்தில் இன்சைட் விண்கலத்தின் சிறிய பகுதியும் தூசு படிந்த செவ்வாயையும் நீங்கள் காணலாம்.

படவிதவி NASA

செவ்வாயின் மத்தியதரைக் கோட்டிற்கு அருகில் இருக்கும் பரந்த சமதரைப் பிரதேசத்தில் உத்தேசித்த இடத்திலேயே இன்ச்டை தரையிறங்கியது. மிகப்பெரிய சமதரையான இந்தப் பிரதேசத்திற்கு ‘செவ்வாயின் மிகப்பெரிய பார்கிங் லோட்’ என செல்லப்பெயரும் உண்டு. இப்படியான ஒரு சமதரைப் பிரதேசம் தான் நாசவிற்கும் வேண்டும்.

பெரிய பாறையிலோ அல்லது சரிவான பிரதேசத்திலோ இன்சைட் தரையிறங்கியிருந்தால் சறுக்கிவிழுந்து அத்துடன் இன்சைட் தனது வாழ்கையை முடித்திருக்கும். அதோடு இன்சைட் விண்கலத்திற்கு செவ்வாயின் பள்ளத்தாக்குகளையோ அல்லது மலைச்சரிவுகளையோ ஆய்வு செய்வதில் இஷ்டம் இல்லை.

இதற்கு முன்னர் அனுப்பிய தளவுளவிகளைவிட மாருபட்டத்தாக இன்சைட் இருக்கும். செவ்வாயின் உள்ளே தோண்டி அதன் அகக்கட்டமைப்பை இது ஆய்வு செய்யப்போகிறது. ‘மோல்’ என அழைக்கப்படும் ஆய்வுக்கருவி சுமார் 5 மீட்டார் ஆழம்வரை செவ்வாயைத் தோண்டி செவ்வாய்க்கு எவ்வளவு வெப்பம் அதன் உட்புறத்தில் இருந்து வருகிறது போன்ற புதைந்துள்ள ரகசியங்களை ஆய்வு செய்யப்போகிறது.

கைப்பந்து அளவுள்ள அடுத்த கருவி ஒன்று நிலச்சரிவு, மணற்புயல், விண்கல் தாக்குதல் மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றால் ஏற்படும் சிறிய நடுக்கங்களைக்கூட அளவிடும் திறன் கொண்டது.

இந்தக் கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் எமக்கு செவ்வாயின் உட்புறம் பற்றிய தெளிவான விளக்கத்தை தரும். அல்ட்ராசவுண்ட் மூலம் வைத்தியர்கள் உடலின் உள்ளே பார்ப்பதுபோல இந்தக் கருவிகள் செவ்வாயின் உள்ளே பார்க்கும்.

இந்தத் தகவலைக் கொண்டு செவ்வாய் மற்றும் பூமி போன்ற பாறைக் கோள்கள் எப்படி உருவாகின என்றும் காலப்போக்கில் அவை எப்படி மாற்றம் அடைந்தன என்றும் அறிந்துகொள்ளக்கூடியவாறு இருக்கும். மேலும் இன்சைட் எங்கே, எப்படி உயிர் உருவாகியது என்றும், அது எப்படி அழியலாம் என்றும் கூட தகவலைத் திரட்டக்கூடும்.

சமுத்திரம், காலநிலை, மனித செயற்பாடுகள் மூலம் நமது பூமி தொடர்ச்சியாக மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதனால் இதன் வரலாறு மீட்கமுடியா வண்ணம் அழிந்துவிட்டது. ஆனால் செவ்வாய் பல மில்லியன் வருடங்களாக எந்தவொரு மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது, எனவே அங்கே இறந்தகாலம் பற்றிய சுவடுகள் அப்படியே இருக்கும்.

மேலதிக தகவல்

இன்சைட் செவ்வாய்க்கு தனியே பயணம் செய்யவில்லை. அதனுடன் ‘Wall-E’ மற்றும் ‘Eva’ என இரண்டு செய்மதிகளும் சேர்ந்தே செவ்வாய் நோக்கி பயணித்தன. இன்சைட் செவ்வாயில் தரையிறங்கிய ஆபத்தான நிமிடங்களில் இந்த இரண்டு செய்மதிகளும் இன்சைட் பற்றிய தரவுகளை பூமிக்கு அனுப்பின.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam