மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

எழுதியது: சிறி சரவணா

2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.

இன்னும் சில நாட்களில் மெசெஞ்சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

சரி, மெசெஞ்சர் நமக்கு புதனைப் பற்றி அறிவித்த தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

புதனில் நீர்

புதனில் நீர் இருப்பதை கண்டறிந்தது ஆய்வாளர்களுக்கே அதிர்ச்சியான விடயம்தான். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன். அதனது பேட்பரப்பு வெப்பநிலை 437 பாகை செல்சியஸ், அப்படி இருக்கும் போது அங்கே நீரா என்பது ஆச்சரியப்படக்கூடிய விடயம்தான்.

விண்கற்கள் மோதுண்டதால் உருவான பள்ளத்தகுகளில் ஒளி விழாத நிழற்பகுதிகளில் ட்ரில்லியன் டன்கள் கணக்கில் உறைந்த நீர் இருப்பதை மெசெஞ்சர் கண்டறிந்தது.

ஆய்வாளர்கள் இந்த நீர், விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் மூலம் புதனுக்கு வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் மூலம் (source)

மெசெஞ்சர் புதனுக்கு செல்வதற்கு முன்பே புதனின் மேற்பரப்பில் பொட்டாசியம், சோடியம், சல்பர், மற்றும் க்ளோரின் போன்ற தாக்கமுறக்கூடிய ரசாயானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் சூரியனுக்கு மிக அண்மையில் உருவாகியுள்ள கோளில் இப்படியான அதிக தாக்கமுறக்கூடிய ரசாயனங்கள் இருக்கமுடியாது. அத்தோடு புதன் இரும்பு அதிகமுள்ள கோள் அங்கே இப்படியான ரசாயனங்கள் இருப்பது முரண்பாடான விடயமாகும்.

மெசெஞ்சர் புதனை ஆராய்ந்தபோது இப்படியான ரசாயனங்கள், விண்கற்கள் விழுந்த பள்ளத்தாக்குகளை சுற்றிய பகுதிகளில் அதிகம் இருப்பதை கண்டறிந்தது.

புதன் உருவாகி 4.5 பில்லியன் வருடங்களில் அதனது மேற்பரப்பில் அதிகளவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதனில் உள்ள பொட்டாசியம் மற்றும் தோரியம் போன்ற ரசாயனங்களின் விகிதத்தை பார்க்கும் போது, செவ்வாயில் உள்ளது போன்றே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2013_Year_Highlights

புதன் பெரிதாக இருந்திருக்கவேண்டும்

புதன் உருவாகி 4.5 பில்லியன் வருடங்களில் அண்ணளவாக 7 கிலோமீட்டர் அளவு தனது ஆரயில் (radius) சுருங்கியுள்ளது.

இதைக் கண்டறிய உதவியது மேசெஞ்சரின் துல்லியமான கருவிகளே.

மெசெஞ்சர், புதனின் மேற்பரப்பை பூரணமாக குறிப்பெடுத்துள்ளது.

பாரிய இரும்பாலான அகப்பகுதியின் காரணம்

புதனுக்கு இரும்பாலான உள்ளகப் பகுதி காணப்படுகிறது. பூமியைப் போலவே இருப்பினும், புதனின் 50% பகுதி இந்த இரும்பாலான பகுதியாகும். இது மற்றைய கோள்களோடு ஒப்பிடும்போது மிக மிக அதிகமாகும்.

ஆய்வாளர்கள் புதனின் இந்த அமைப்பைப் பற்றி பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

அதாவது, புதன் ஆராம்பத்தில் உருவாகும் போது பாரிய கோளாக உருவாக்கி இருக்கவேண்டும், ஆனால் அதன் மேற்பரப்பு, பாரிய மோதல்களில் சிதறுண்டு போயிருக்கவேண்டும்.

அல்லது வேறு விதமாகவும் ஆய்வாளர்கள் சிந்திகின்றனர். அதாவது, எப்படி வியாழன் சனி போன்ற கோள்கள் சூரியனைவிட்டு தொலைவில் உருவாகியதோ, அதாவது அந்தப் பகுதியில் தான் நீர் ஒடுங்கி (condense) பனியாகும், அதேபோல சூரியனுக்கு மிக அருகில் இரும்பு ஒடுங்கி புதனாக உருவாக்கி இருக்கவேண்டும்.

இது போக பல்வேறு முக்கிய தகவல்களையும் மெசெஞ்சர் விண்கலம் எமக்கு அனுப்பியுள்ளது. கோள்களின் உருவாக்கம் பற்றி நாமறிய மிகப்பயனுள்ள தகவல்களை மெசெஞ்சர் விண்கலம் திரட்டியுள்ளது.

இன்னும் சில நாட்களில் புதனோடு மோதவிருக்கும் 485kg எடை கொண்ட மெசெஞ்சர் 16கிலோமீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தாக்கை உருவாகும் என்று கணக்கிட்டுள்ளனர்.