வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

எழுதியது: சிறி சரவணா

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.

1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான, நாசா (NASA) சூரியத்தொகுதியில் இருக்கும் வெளிக்கோள்களான, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை அருகில் சென்று படம்பிடிக்கவும், மற்றும் அதன் பண்புகளை ஆராயவும் என உருவாக்கிய ஒரு திட்டமே, வொயேஜர் (Voyager Mission) திட்டமாகும்.

வொயேஜர் திட்டத்தின் குறிக்கோள்

வொயேஜர் திட்டத்தை உருவாக்கும் போது நாசாவின் முக்கிய நோக்கம் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஆராய்வதே. வொயேஜர் திட்டம் இரட்டை விண்கலங்களை உள்ளடக்கியது. இரண்டுமே அமைப்பிலும், செயற்பாட்டிலும் ஒன்றையொன்று ஒத்த விண்கலங்கள்.

இவற்றின் முதன்மைக்குறிக்கோளான வியாழனையும் சனியையும் ஆராய்ந்தவுடன், வொயேஜர் 2 வெளிக்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை நோக்கி சென்று அவற்றையும் ஆராய்ந்துவிட்டு, தொடர்ந்து சூரியனுக்கு எதிர்திசையில் பயனிக்கத்தொடகியது. இந்த புதிய திட்டம் இப்போது வொயேஜர் வின்மீனிடைத் திட்டம் (voyager interstellar mission) என அழைக்கப்படுகிறது.

வொயேஜர் திட்டத்தின் ஆரம்பம்

Gray Flandro என்னும் நாசா பொறியியலாளர், 175 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் வரும் கோள்களின் அமைப்பினை கண்டறிந்தார், இந்த அமைப்பினை பயன்படுத்தி வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் மற்றும் ப்ளுட்டோ ஆகிய கோள்களை ஒரே தடவையில் சென்றடைய முடியும். அதாவது, விண்கலத்தை சரியான பாதையில் செலுத்துவதன் மூலம், இந்தக் கோள்களின் ஈர்ப்பு சக்தியை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்தி படிப்படியாக, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை சென்றடைய முடியும்.

இந்த கோள்களின் அமைப்பு 1970 களின் இறுதியில் வருவதை அறிந்த நாசா, அதனைப் பயன்படுத்தி, வெளிக்கோள்களை ஆய்வுசெய்ய முடிவு செய்தது.

முடிவில்லாப் பயணத்தின் ஆரம்பமும் வியாழனும்

முதன் முதலில் வொயேஜர் 2 விண்கலமே விண்ணுக்கு ஏவப்பட்டது. 722kg நிறை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20, 1977 இல் தனது பயணத்தை ஆராம்பித்து, ஜூலை 9, 1979 இல் வியாழனுக்கு மிக அருகில் வந்தது. அண்ணளவாக 570,000 km தூரத்தில்! அதுபோல வியாழனுக்கும் வளையங்கள் உண்டு என்று கண்டறிந்தது வொயேஜர் 2.

வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் மார்ச் 5, 1979 இலேயே அது வியாழனை அடைந்துவிட்டது. அண்ணளவாக 349,000 km தூரத்தில் அது வியாழனை நெருங்கியது. மிக அருகில் சென்றதால் அதனால் மிகத் தெளிவாக வியாழனையும் அதனது அமைப்புக்களையும் புகைப்படம் எடுக்க முடிந்தது.

நீங்கள் இங்கு ஒன்றை கவனிக்கலாம், வொயேஜர் 2 ஐ விட வொயேஜர் 1 ஐ விட முதலில் அனுப்பப்பட்டது, ஆனால் வொயேஜர் 1 வேகமாகவும் குறுகிய தூரம் கொண்ட பாதையில் பயனித்த்தாலும் அதனால் வொயேஜர் 2 ஐ விட முதலில் வியாழனைச் சென்று அடைந்தது.

அதேபோல வியாழனின் பாரிய சிவப்புப் புள்ளி ஒரு மிகப்பெரிய புயல் என்பதனையும் எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புயல் எவ்வளவு பெரியது என்பதனை கூறியாகவேண்டும், இந்தப் புயலினுள் அண்ணளவாக மூன்று பூமிகளை புதைக்க முடியும்!

வியாழனும் அதன் துணைக்கோள் Io வும்
வியாழனும் அதன் துணைக்கோள் Io வும்

இவை எல்லாவற்றையும் ஓரளவுக்கு கணித்திருந்த ஆய்வாளர்களுக்கு பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்தது, வியாழனின் துணைக்கோளான ஐஓ (Io) வில் எரிமலைச் செயற்பாடுகள் காணப்படுவதே. முதன்முதலாக பூமியைத் தவிர, சூரியத் தொகுதியில் வேறு ஓர் இடத்தில் எரிமலைச் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டது.

வொயேஜர் 1, வொயேஜர் 2 ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக 9 எரிமலை வெடிப்புக்களை அவதானித்தன. அதுமட்டுமல்லாது, அடுத்த துணைக்கோளான யுரோப்பாவில் கோடுகள் இருப்பதும் தெரியவந்தது. இது பாரிய வெடிப்புகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் அப்போது கருதினர். பின்னர் நடைபெற்ற ஆய்வுகள் மூலம், இப்போது நமக்கு யுரோப்பாவைப் பற்றி பலவிடயங்கள் தெரிய வந்துள்ளன.

பனியால் மூடப்பட்டுள்ள யுரோப்பாவின் அகப்பகுதியில் நீர் திரவநிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகப்பகுதியின் வெப்பநிலை காரணமாக மேற்பரப்பில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன, அவையே கோடுகள் போல தென்படுகின்றன.

இப்படி வியாழனையும் அதன் சில துணைக்கோள்களையும் ஆய்வு செய்தபின் இரண்டு வொயேஜர் விண்கலங்களும் சனியை நோக்கி பயணித்தது.

சனியோடு ஒரு மோதல்

வொயேஜர் 1 நவம்பர் 1980 இல் சனியை அடைந்தது. நவம்பர் 12 இல், சனிக்கு மிக அருகில், அதாவது சனியின் மேற்பரப்பில் இருந்து  124,000 km தூரத்திற்குள் வொயேஜர் 1 வந்தது.

சனியின் வளையங்களைப் பற்றி தெளிவான படங்களும், சனியின் வளிமண்டலம் பற்றிய தகவல்களையும் முதன் முதலில் எமக்கு தெளிவாக அனுப்பி வைத்தது.

அதோடு மட்டுமல்லாது, வொயேஜர் 1, சனியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் 11% ஹீலியம் இருப்பதையும், எஞ்சியதெல்லாம் ஐதரசனாக இருப்பதையும் கண்டறிந்தது. மேலும் சனியின் மத்திய பகுதியில் புயல் மணிக்கு 1700 km வேகத்தில் வீசுவதையும் அளவிட்டது.

800px-Saturn_(planet)_large

வொயேஜர் 2 சனிக்கு மிக அருகில் ஆகஸ்ட் 26, 1981 இல் சென்றது. இது சனியின் வெப்பநிலையை அளவிட்டது. சனியின் மேற்பரப்பு வெப்பநிலை -203 பாகை செல்சியஸ் ஆகவும், ஆழாமான பகுதிகளில் வெப்பநிலை -130 பாகை செல்சியசாகவும் அதிகரித்து காணப்பட்டதை வொயேஜர் 2 அளவிட்டது.

பயனியர் 11 என்ற விண்கலம் சனியின் டைட்டன் என்ற துணைக்கோளில் அடர்த்தியான வாயுவாலான மேற்பரப்பை கண்டறிந்ததால், வொயேஜர் 1 இன் அடுத்த இலக்காக டைட்டன் அமைந்தது. ஆனால் டைட்டனின் ஈர்ப்புவிசை வொயேஜர் 1 இன் பாதையை மாற்றிவிட, அதனது கோள்களை நோக்கிய பயணம் முடிவுக்கு வந்தது எனலாம்.

இரண்டு வேறுபட்ட பயணங்கள்

வொயேஜர் 2, சனியின் ஈர்ப்பு விசையை துணையாக பயன்படுத்தி, அடுத்த கட்டமாக யுரேனஸ் கோளை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. ஜனவரி 24, 1986 இல் வெறும் 81,500 km இடைவெளியில் யுரேனஸை வொயேஜர் 2 சந்தித்தது.

மற்றைய கோள்களைவிட யுரேனஸ், கிடையாக சுற்றுவதை வொயேஜர் 2 கண்டறிந்தது. மட்டுமல்லாது, யுரேனசின் ஐந்து வளையங்களையும் வொயேஜர் 2 ஆராய்ந்து, இந்த வளையங்கள், சனி மற்றும் வியாழனின் வளையங்களை விட வேறுபட்டதாக இருப்பதையும் கண்டறிந்தது. அத்தோடு யுரேனசின் துணைக்கோள்களையும் ஆய்வுசெய்துவிட்டு அடுத்த கட்டமாக இறுதிக் கோளான நேப்டியுனை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

வொயேஜர் 1 இன் பயணம் மேற்கொண்டு எந்தவொரு கோள்களையும் ஆராயாமல் அது சூரியத் தொகுதியை விட்டு வெளியே செல்லும் வண்ணம் அமைந்தது. 1990 இல் வொயேஜர் 1, அதற்கு முன்னர் செலுத்தப்பட்ட பயனியர் 1 மற்றும் பயனியர் 2 ஆகிய வேகம் குறைவான விண்கலங்களை முந்திச் சென்றது. அன்று அது படைத்த சாதனை இன்னும் வரப்போகும் பல தசாப்தங்களுக்கு முறியடிக்கப் பட முடியாதது.

மனிதன் உருவாக்கி, பூமியை விட்டு மிகத் தொலைவு சென்ற பொருள் என்ற பெருமையை அது பெற்றது.

தற்போது புளுட்டோவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நியூ ஹொரைசன் என்ற விண்கலம், வொயேஜர் 1 ஐ விட அதிகமான ஆரம்ப வேகத்தைக் கொண்டிருந்தாலும், வொயேஜர் 1 ஏ மிக வேகமாக பயணிக்கும் விண்கலமாகும். அது வியாழன் மற்றும் சனியின் ஈர்ப்பு விசையை துணையாகக் கொண்டு தனது வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டது (slingshot effect).

பெப்ரவரி 17, 1998 இல், வொயேஜர் 1, சூரியனில் இருந்து அண்ணளவாக 10 பில்லியன் km தூரத்தில், செக்கனுக்கு 17 km என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.

வொயேஜர் 2 இன் நெப்டியூன் சந்திப்பு

வொயேஜர் 2, ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனுக்கு மிக அருகில் வந்தது. அதுமட்டுமல்லாது, அது நேப்டியுனின் பெரிய துணைக்கோளான ட்ரைடன் அருகிலும் சென்று அதனையும் படம்பிடித்தது.

நேப்டியுனில் இருந்த “பெரும் கரும்புள்ளி”யையும் முதன்முதலில் வொயேஜர் 2 கண்டது. இப்போது அந்தப் புள்ளி மறைந்துவிட்டது. இது நெப்டியுனின் மேல்மட்ட முகில்கூட்டத்தில் இருந்த துவாரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.

நெப்டியுனின் வளிமண்டலத்தில், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகியன காணப்படுகின்றன. நேப்டியுனின் நீல நிறத்திற்கு காரணம், அதிலுள்ள மெதேன் வாயு ஆகும். இது சூரிய ஒளியில் இருக்கும் சிவப்பு நிறத்தை உறுஞ்சிக் கொண்டு, நீல நிறத்தை தெறிப்படைய செய்கிறது.

வொயேஜர் விண்மீனிடை வெளிப் பிரதேச ஆய்வுப் பணி

நேப்டியுனை ஆய்வு செய்து முடித்தவுடன், வொயேஜர் விண்கலங்களின் பிரதான பணி முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் அதன் இரண்டாவது பணியான, “வொயேஜர் விண்மீனிடை வெளிப் பிரதேச ஆய்வுப் பணி” தொடங்கியது. வொயேஜர் 1 ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுவிட, நேப்டியுனின் ஆய்வை முடித்துக்கொண்டு வொயேஜர் 2 விண்கலமும் தனது சகோதரனின் பயணத்தில் பங்கெடுத்துக்கொண்டது.

interstellar_2

சூரியனது ஆதிக்கம் முடியும் எல்லையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், முதலாவது விடுவிப்பு அதிர்ச்சி எல்லை (termination shock), இரண்டாவது ஹெலியோசீத் (heliosheath), மூன்றாவதாக அதற்கு வெளியில் இருப்பது வின்மீனிடை வெளி (interstellar space), இது சூரியனது கதிர்வீச்சி ஆதிக்கத்திற்கு வெளியே உள்ள பிரதேசமாகும். ஹெலியோசீத் மற்றும் வின்மீனிடை வெளிப் பிரதேசத்திற்கு இடையில் ஹெலியோபோஸ் எனப்படும் பகுதி ஒன்று இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வொயேஜர் எந்தப் பிரதேசத்தில் இருகின்றது என்று பார்க்கலாம்.

வொயேஜர் 1, டிசம்பர் 2004 இல் விடுவிப்பு அதிர்ச்சி எல்லையை தாண்டிச் சென்றது. அப்போது அது சூரியனில் இருந்து 94 AU தொலைவில் இருந்தது. (1AU எனப்படுவது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகும் – 150 மில்லியன் km, AU – astronomical unit எனப்படும் அலகு, சூரியத் தொகுதியில் தூரத்தை அளக்கப் பயன்படும் அலகாகும்).

வொயேஜர் 2, மே 2006 இல் விடுவிப்பு அதிர்ச்சி எல்லையைக் கடந்தது. அப்போது அது, சூரியனில் இருந்து 76 AU தொலைவில் இருந்தது. இந்த வேறுபட்ட தூரத்திற்கு காரணம், வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய இரண்டும் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கிறது. ஆக விடுவிப்பு அதிர்ச்சி எல்லை ஒரே சீராக எல்லாத்திசைகளிலும் இல்லை என்பதனை அறியக்கூடியதாக இருக்கிறது.

interstellar_1

பெப்ரவரி 2015 இல் வொயேஜர் 1, சூரியனில் இருந்து 19.5 பில்லியன் கிலோமீற்றர் (130.5AU) தொலைவிலும், வொயேஜர் 2, 16 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிழும் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

வொயேஜர் 1, அண்ணளவாக ஒரு வருடத்தில் 3.6AU என்ற வேகத்தில் சூரியத் தொகுதியின் மத்திய அச்சுக்கு 35 பாகை வடக்கு நோக்கி பயணிக்க, வொயேஜர் 2, வருடத்திற்கு 3.3AU என்ற வேகத்தில், சூரியத் தொகுதியின் மத்திய அச்சுக்கு 48 பாகை தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருகின்றன.

இந்த இரண்டு விண்கலங்களின் தற்போதைய பிரதான நோக்கம், ஹெலியோபோஸ் பகுதியை சென்றடைவது தான், அதுதான், சூரியனது கதிர்வீச்சு ஆதிக்கம் முழுமையாக முடிவடையும் பிரதேசமாகும். இன்னும் 10 அல்லது 15 வருடத்தில் வொயேஜர் விண்கலங்கள் இந்தப் பிரதேசத்தை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொயேஜர் விண்கலங்கள் தெர்மோஎலெக்ட்ரிக் மின்னாக்கி மூலம் சக்தியை உருவாக்கிக்கொள்கிறது. இதற்கு புளுட்டோனியம் சக்தி முதலாக பயன்படுத்தப் படுகிறது. விண்ணுக்குச் செலுத்தப்படும்போது இந்த மின்னாக்கி 470W சக்தியை உருவாகியது. ஆனால் அக்டோபர் 2011 இல் இந்த மின்னாக்கியின் சக்தி வெளியீடு 268W ஆக குறைந்து விட்டது.

இப்படியாக சக்தியின் அளவு குறைந்து வரும்போது, வொயேஜர் விண்கலங்களில் இருக்கும் சில கருவிகள், மின்சக்தியை சேமிக்கும் நோக்குடன், இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நாசா ஆய்வாளர்கள், வொயேஜர் விண்கலங்கள் 2020 வரையாவது தொழிற்படும் என கணக்கிட்டுள்ளனர். அந்தக் காலப்பகுதிக்குள் நிச்சயம் வொயேஜர் 1 ஹெலியோபோஸ் பகுதியை அடைந்துவிடக்கூடும். அப்போது வொயேஜர் 1, சூரியனில் இருந்து 22.1 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிலும், வொயேஜர் 2, 18.4 பில்லியன் கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும்.

அதன் பின்னர் அது பூமிக்குத் தகவல்களை அனுப்புவதற்கு தேவையான சக்தி முடிவடைந்துவிட்டாலும், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். காரணம் அதனை நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ அங்கே, அதாவது வின்மீனிடை வெளிப் பிரதேசத்தில் ஒன்றும் இல்லை!

அவை தனது பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கும், இடையில் எதாவது ஒன்று அவற்றைக் கடக்கும் வரை, அப்படி எதுவும் அவற்றைச் சந்திக்கவில்லை என்றால், அவற்றின் விதி, பால்வீதியைச் சுற்றி வலம்வரலாம்!

வொயேஜர் கொண்டுசெல்லும் தங்கத் தகடுகள்

இரண்டு வொயேஜர் கலங்களும், தங்களுடன், தங்கத்தால் ஆன போனோகிராம் (இசைத் தகடு) தகடுகளை காவிச்செல்கிறது. இவை சாதாரண தகவல் தகடுகள் அல்ல, இவற்றில் பூமியில் இருக்கும் உய்ரிபல்வகமையின் படங்களும் ஒலிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1024px-Voyager_Golden_Record_fx

வொயேஜர் விண்கலங்கள் எந்தவொரு நட்சத்திரத் தொகுதியையும் குறிப்பாக நோக்கிச் செல்லவில்லை, ஆனாலும், இன்னும் 40,000 வருடத்தில், வொயேஜர் 1, Gliese 445 என்ற விண்மீனில் இருந்து 1.6 ஒளியாண்டுகள் தூரத்தினுள் செல்லும். இருந்தும் இந்தப் பரந்த வின்மீனிடை வெளிப் பகுதியில் ஒரு நாகரீகத்தின் கையில் இந்த தகடுகள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிதே.

வானியலாளர் கார்ல் சேகன் தலைமையில் இந்த தகட்டில் உள்ளடக்கப் படவேண்டியவைகளை கவனமாக தெரிவு செய்தனர்.

116 படங்கள், பல்வேறுபட்ட இயற்கை ஒலிகள், காற்றின் சத்தம், மின்னல் இடிச் சத்தம், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சத்தங்கள். உலகில் உள்ள மொழிகளில், 55 மொழிகளில் வணக்கமும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவரின் செய்தியும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, பிரபல இசைக்கலைஞர்களான மொசார்ட், பீதோவன் போன்றவர்களின் இசையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, நமது சூரியத் தொகுதியின் அமைவிடமும், ஐதரசன் அணுவின் கட்டமைப்பும் இந்தத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழில்நுட்ப நாகரீகம் இந்த தகட்டை உருவாக்கி அனுப்பியுள்ளது என்ற செய்தியோடு இந்தத் தகடுகளைக் கொண்டு வொயேஜர் விண்கலங்கள் விதிவிட்ட வழியில் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

ஒருவேளை பல்லாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் இந்தத் தகடுகள் ஒரு நாகரீகத்தின் கையில் கிடைக்கலாம், அதனைக்கொண்டு அவை பூமியைக் கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

மனித இனத்திற்காக இந்த மகத்தான சாதனைச் செய்து, வெளிக்கோள்களைப் பற்றி பல அறிய தகவல்களை நமக்குத் தெரிவித்து, இன்று சூரியத்தொகுதியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் இந்த வொயேஜர் விண்கலங்களுக்கு எமது நன்றியையும் சமர்பிக்கலாம்.