உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா எண்டு காஜல் அகர்வால் கேட்ட காலம் போய் இப்பொழுது உங்களது மலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளன என்னும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர் அவுஸ்திரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
மைக்ரோ பிளாஸ்டிக் என்ன அழைக்கப்படும் மிக நுண்ணிய அளவிலான வெற்றுக் கண்ணிற்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் மனித மலத்தில் கலந்து உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த ஆராய்சிக் குழு தெரிவித்துள்ளது. அவுஸ்திரியா சுற்றாடல் நிறுவனம் மற்றும் வியென்னா மருத்துவ பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உலகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த இத்தாலி, ஜப்பான், போலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எட்டு மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த அதிர்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஆராய்ச்சியில் பங்குபற்றிய நபர்கள் உட்கொண்ட உணவுகள் பற்றிய அறிக்கை பெறப்பட்டபோது அவர்கள் பிளாஸ்டிக் போத்தல்களில் நீர் அருந்துவதும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டமை தெரியவந்ததுள்ளது. ஆராய்ச்சியின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எட்டு மாதிரிகளிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெரிய பிளாஸ்டிக் துண்டுகள் சிதைவடையும் போது தோன்றும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையான இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் நோய்க் கிருமிகள் என்பன உடலிற்குள் புகுவதற்கு உதவிபுரிவதோடு மனித உடலில் இயற்கையாக உள்ள நோயெதிர்ப்பு சக்தியையும் பாதிப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்சிக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த இரு தசாப்த காலங்களாக பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை மிக அதிகளவில் உயர்துள்ளது. இதுவரை காலமும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் அரைவாசிக்கும் மேற்பட்ட பங்கு பிளாஸ்டிக் 21ம் நூற்றாண்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவற்றில் வெறும் 20 சதவீதமான கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுதப்படுவதோடு ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக ஒரு மில்லியன் பிளாஸ்டிக் போத்தல்கள் புதிதாக கொள்வனவு செய்யப்படுவதாக நேஷனல் ஜியோகிராபிக் சேனல் நடத்திய ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக ஒன்பது மில்லியன் தொன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதோடு அவை கடல் வாழ் உயிரினங்களினால் உட்கொள்ளப்பட்டு அதன் மூலம் மனித உடலை அடைத்து பல பாரதுரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உணவு கையாளல் மற்றும் உணவு தயாரிப்பு நிலைகளிலும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் துகள்கள் எமது உடலினுள் சேர்கின்றன.
இவை எவ்வாறு மனித உடலிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன தொடர்பான விடயங்கள் தெளிவாக கிடைக்கப் பெறாமையினால் உலக சுகாதார மையம் தொடர்ச்சியாக இது தொடர்பில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் இது தொடர்பான விழிப்புணர்வுடன், பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை கூடிய அளவில் குறைப்பது எதிர்கால சந்ததியினரிற்கும் உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களிற்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும்.
எழுதியது: பிரதீப்
#parimaanam #sciencepanda
⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக்கும் போட்டுவிட்டு போகவும்.😎😎
⚡ https://www.facebook.com/parimaanam
⚡ இலவச மின்னூல்கள் >>> https://bit.ly/parimaanam-books