விண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்

என்னதான் நீல் ஆம்ஸ்ட்ராங், யூரி ககாரின், கல்பனா சாவ்லா போன்ற விண்வெளி வீர வீராங்கனைகள் புகழ் பெற்று விளங்கினாலும் விண்வெளிப் பயணங்களினால் அவர்களிற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தசைகளால் ஆக்கப்பட்ட எமது உடலானது புவியீர்ப்பு விசையின் கீழ் தொழிற்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதை புவியீர்ப்பு விசையைத்தாண்டி கொண்டு செல்லும்போது அதன் சீரான இயக்கம் பாதிக்கப்படுகின்றது. உடலினுள் காணப்படும் பாயங்கள் எதிர் திசையில் பயணிப்பது தொடங்கி DNA இன் செயற்ப்பாடு மாற்றமடைவது முதலான பிரச்சினைகள் தோன்றி சுகதேகியான நபரைக்கூட உலுக்கி எடுத்துவிடும் தன்மை வாய்ந்தது விண்வெளிப்பயணம்.

தற்போது விண்வெளிப்பயணங்களின் பின் விண்வெளி வீரர்களின் மூளைகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அவர்களது மூளைத் திசுக்களில் ஏற்படும் பதிப்பானது அவர்கள் பூமிக்குத் திரும்பி சுமார் எழு மாதங்களிற்கு மேல் தொடர்வது கண்டறியப்பட்டுள்ளது.

நியூ இங்லன்ட் ஜெர்னல் ஒப் மெடிசின் என்னும் சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையின்படி, சராசரியாக 189 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த 10 விண்வெளிவீரர்களின் மூளைகள் காந்த அதிர்வுப் படமாக்கல் தொழில்நுட்பம் மூலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டபோது, விண்வெளிப்பயணமானது, மூளைய முன்னாண் பாயம் எனப்படும் மூளை மற்றும் முள்ளந்தண்டை அதிர்வுகள் மற்றும் அசைவுகளிலிருந்து பாதுகாக்கும் திரவத்தின் அளவை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

விண்வெளியில் நடக்கும் விண்வெளி வீரர்

மேலதிகமாக தோன்றும் இப் பாயமானது, நரைச் சடப்பொருள் எனப்படும், நரை அல்லது சாம்பல் நிற, நரம்பு நார்கள் மற்றும் நரம்புக் கலவுடல்களை கொண்ட நரம்புத் திசுக்களை அழுத்துவது தெரியவந்துள்ளது. பூமிக்கு திரும்பிய பின்பு அனேகமாக மூளை பழைய நிலையை அடைந்தாலும் சில பாதிப்புகள் தொடர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும் மூளையின் வெண் சடப்பொருள் என அழைக்கப்படும், பெருமளவான நரம்பு நார்களை கொண்ட பகுதி பாதிப்படையாமல் காணப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஆய்வுகளின் போது விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பி சில மாதங்களின் பின் வெண் சடப்பொருளின் அளவு குறைவது அவதானிக்கப்பட்டுளது. மீண்டும் இதற்கும் காரணம் மூளையமுன்ணான் பாயிதான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப் பாயியால் மண்டையோட்டினுள் அழுத்தம் அதிகரிக்கப்படும் போது அதனுள் சாதாரணமாக சுயாதீனமாக காணப்படும் நீரானது வெண்சடபொருளினுள் புகுகின்றது. அவர்கள் பூமிக்குத் திரும்பும் போது அழுத்தம் குறைவதால் நீர் வெளியேறி வெண் சடப்பொருள் பழைய நிலையை அடைகின்றது. மேலும் இப் பௌதீக மாற்றங்கள், அவர்களின் அறிவாற்றல் மற்றும் உளநலனில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தொடர்பில் மேலதிக ஆராய்சிகள் தேவைப்படுவதாக கருத்துத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க கடந்த காலத்தில் விண்வெளி வீர்கள் சந்தித்த, சந்திக்கப் போகும் சில உடலியல் சார் மாற்றங்களைப் பற்றிப்பார்போம்.

தட்டையாகும் கருவிழிகள்

மூளைய முன்ணாண் பாயியால் ஏற்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளில் மங்கலான பார்வையும் ஒன்றாகும். இது அனைத்து விண்வெளி வீரர்களும் சந்திக்கும் பொதுவான ஒரு பாதிப்பாகும். விஞ்ஞானிகள், மனித உடல் ஈர்ப்புவிசை குறைந்த சூழல்களில் உள்ளபோது உடலின் மேற்பகுதியை நோக்கிச் செல்லும் பாயிகளே இப் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். நாசாவின் கணிப்பின்படி ஸ்காட் கெல்லி என்னும் விண்வெளி வீரரின் 340 நாட்கள் விண்வெளிப்பயணத்தின் போது கிட்டத்தட்ட 2 லீட்டர் அளவிலான பாயி அவரின் கால்களிலிருந்து தலைப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளது. விண்வெளி வீரர்களின் முகங்கள் அவர்கள் பூமிக்குத் திரும்பி பின் சற்று உப்பலாக காணப்படுவதற்கு இதுவே காரணமாகும்.இப் பாதிப்பின் காரணமாகவே கண் பார்வை மங்கலடைந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர்.

எனினும் 2016ம், ஆண்டு நடாத்தப்பட்ட ஆய்வின் போது இதற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டது. மூளையில் தோன்றும் மேலதிக மூளைய முன்ணாண் பாயி கருவிழியின் பின்பகுதியை அழுத்துவதால், கட்குமிழ் தட்டையாக்கப்பட்டு பார்வை நரம்பு வீங்குவதாலேயே இப் பிரச்சினை ஏற்படுவது கண்டறியப்பட்டது. சில சமயங்களில் பழக்கப்பட்ட புவியீர்ப்பு எல்லைக்குள் திரும்பும் போது இது தானாகவே சரிசெய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அனைத்து நேரங்களிலும் அவ்வாறு நடைபெறுவதில்லை, எனவே இந் நிலைமையை சரி செய்ய சில சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

DNA மாற்றங்கள்

இவ் வருட ஆரம்பத்தில் ஸ்காட் கெல்லி என்னும் விண்வெளி வீரரது DNA விகாரமடைந்தது தொடர்பாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. அவர்கூட தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பாக பதிவிட்டிருந்தார். DNA இல் காணப்படும் ஜீன்கள் உடலில் தொகுக்கப்படும் புரதங்கள் எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவே காணப்படும். விண்வெளிப் பயணமானது இவற்றுள் சிலவற்றின் மீதே தாக்கம் செலுத்துவது அறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிர்பீடனத் தொகுதி, DNA மீள்கட்டமைப்பு மற்றும் என்பு வளர்ச்சி என்பவே இதனால் பாதிக்கப்படுகின்றன. பூமிக்குத் திரும்பிய பின் ஆறு மாதங்கள் வரையில் இப் பாதிப்பு தொடர்வது நாசாவின் ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்துள்ளது.

வலிமை குறையும் தசைகளும் எலும்புகளும்

நீங்கள் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டதைப் பார்த்து மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும் போதும் கூட புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக உங்களது உடல் ஆச்சர்யப்படத்தக்க அளவு வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. அண்டவெளியில் அவ்வாறான ஈர்ப்பு விசைகள் உங்களது உடலின் மீது தொழிற்படாமையினால் உடற்தசைகள் விரைவாக சுருக்கமடைவதுடன் எலும்புகள் இலகுவாக உடையும் நிலைமை ஏற்படுகிறது. விண்வெளி வீரர்கள், அவர்கள் விண்வெளியில் தங்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் சராசரியாக அவர்களது எலும்புகளின் மொத்த நிறையில் ஒன்று தொடக்கம் இரண்டு வீதத்தை இழக்கின்றனர். இதில பெருமளவான பாதிப்பு முதுகின் கீழ்ப்புறம் மற்றும் கால்களில் ஏற்படுகிறது. இவ்வாறு எலும்புகள் நலிவடையும் போது அதிலிருந்து வெளியேறும் கல்சியம் குருதியில் கலந்து சிறுநீரகத்தை அடைவதால் சிறுநீரக கற்கள் தோன்றும் அபாயமும் ஏற்படுகிறது.

இவ்வாறான தீவிரமான பாதிப்புகள் தொடர்பாக விஞ்ஞானிகள் விழிப்புணர்வுடன் இருப்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட ஆலோசனை வழங்கப்படுவதோடு கல்சியம் மற்றும் விட்டமின் D நிறைந்த உணவுகளும் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் அணியும் கையுறையினால் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தின் காரணமாக கைவிரல் நகங்கள் கழன்றுவிடும் பிரச்சினையையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது, ஆனால் அவை மீண்டும் வளரும் தன்மை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் ஈர்ப்புவிசை குறைவால் அவர்கள் தலையை நிமிர்ந்த நிலையில் வைப்பதற்கு சக்தியை செலவிடத் தேவையில்லை, அவர்கள் மீண்டும் புவியின் ஈர்ப்பு மண்டலத்தினுள் புகும் போது ஈர்ப்புவிசை அவர்கள் மீது தொழிற்படுவதால் அவர்கள் தலையை நிமிர்ந்த நிலையில் வைக்கப்பழக்கப்பட சிறிது காலம் தேவைப்படுவதாக க்றிஸ் ஹட்பீல்ட் எனும் விண்வெளிவீரர் தெரிவித்துள்ளார்.

எழுதியது: பிரதீப் டாம்

தகவகல்: nationalgeographic


⚡ #parimaanam #sciencepanda
⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://parimaanam.net
https://www.facebook.com/parimaanam
⚡ இலவச மின்னூல்கள் >>> https://bit.ly/parimaanam-books