ஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை

ஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்?

இந்தப் பிரபஞ்சம் காஸ்மிக் வெப் (பிரபஞ்ச வலை) எனப்படும் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அசூர கட்டமைப்பு விண்மீன்கள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைகள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைக் கொத்துக்கள் (கிளஸ்டர்) எனப்படும் வலைப்பின்னல் கட்டமைப்பில் உருவாகியுள்ளது. விண்மீன் பேரடைகளின் கொத்துக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் மாபெரும் கட்டமைப்பிற்கு சுப்பர்கிளஸ்டர் என்று பெயர்!

சுப்பர்கிளஸ்டர் கட்டமைப்பு இந்தப் பிரபஞ்ச வெளியில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஒளியாண்டுகள் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இதுவரை நாம் 50 இற்கும் குறைவான சுப்பர்கிளஸ்டர்களை இனங்கண்டுள்ளோம். ஆனாலும் இந்த பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான சுப்பர்கிளஸ்டர்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சுப்பர்கிளஸ்டர்கள் ஒன்று சேர்ந்துதான் பிரபஞ்ச வலை எனப்படும் காஸ்மிக் வெப்பை உருவாக்கியுள்ளன.

இந்த வாரத்தில் பிரபஞ்சத்தின் தொலைவில் ஒரு புதிய சுப்பர்கிளஸ்டர் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இதற்கு ஹைபீரியன் சுப்பர்கிளஸ்டர் என பெயரிட்டுள்ளனர்.

படத்தில் ஹைபீரியன் சுப்பர்கிளஸ்டர்; சுப்பர்கிளஸ்டர் அளவை ஒப்பீடு செய்ய விண்மீன் பேரடை கொத்து ஒன்றின் (நூற்றுக்கணக்கான விண்மீன் பேரடைகளின் தொகுப்பு) சராசரி அளவும் காட்டப்பட்டுள்ளது. படவுதவி: ESO/L. Calçada & Olga Cucciati et al.
படத்தில் ஹைபீரியன் சுப்பர்கிளஸ்டர்; சுப்பர்கிளஸ்டர் அளவை ஒப்பீடு செய்ய விண்மீன் பேரடை கொத்து ஒன்றின் (நூற்றுக்கணக்கான விண்மீன் பேரடைகளின் தொகுப்பு) சராசரி அளவும் காட்டப்பட்டுள்ளது. படவுதவி: ESO/L. Calçada & Olga Cucciati et al.

11 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இன்னும் சிறு குழந்தையாக பால்ய பருவத்தில் உள்ள இந்த சுப்பர்கிளஸ்டர் உருவாவதை எம்மால் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது. இது இன்னும் வளர்ந்துகொண்டு இருக்கும் கட்டமைப்பாக இருந்தாலும், பூமியில் இருந்து இவ்வளவு தொலைவில் நாம் கண்டறிந்த மிகப்பெரிய கட்டமைப்பு இதுதான்.

இது மிக மிகத் தொலைவில் இருப்பதால், பிரபஞ்சம் இளவயதில் இருக்கும் போது இந்த சுப்பர்கிளஸ்டர் எப்படி இருந்திருக்கும் என்றுதான் நாம் தற்போது அவதானிக்கிறோம். இதற்குக் காரணம் இந்தப் பிரபஞ்சத்தில் மிக வேகமாக பயணிக்கக்கூடிய ஆசாமி ஒளிதான். அதற்குமே வெளியைக் கடக்க நேரம் எடுக்கிறதே.

இப்படி மிகத் தொலைவில் இருக்கும் சுப்பர்கிளஸ்டர் போன்ற கட்டமைப்புகளில் இருந்து ஒளி எம்மை வந்து அடைய பல பில்லியன் வருடங்கள் எடுக்கிறது. எனவே நாம் தற்போது பார்க்கும் போது பல மில்லியன் அல்லது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எப்படி இந்த கட்டமைப்புகள் இருந்திருக்குமோ அதைத்தான் எம்மால் தற்போது பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.

பிரபஞ்சம் மிக மிக இளமையாக இருந்த காலத்திலேயே இப்படி ஒரு பெரிய கடம்மைப்பு வளர்ந்துள்ளது என்பது ஆச்சரியமான விடையம் தான். அக்காலத்திலேயே இந்தக் கட்டமைப்பில் ஒரு மில்லியன் பில்லியன் சூரியன்களை உருவாக்கத்தேவையான வஸ்து இருக்கிறது என்பது மேலும் ஆச்சரியமூட்டும் ஒரு தகவல்தான்!

மேலதிக தகவல்

நாமிருப்பது லனியாக்கீயா (Laniakea) எனப்படும் ஒரு சுப்பர்கிளஸ்டரில். இதில் அண்ணளவாக 100,000 விண்மீன் பேரடைகள் உண்டு!

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம்: https://www.unawe.org/kids/unawe1825/


⚡ #parimaanam #sciencepanda
⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://www.facebook.com/parimaanam
⚡ மின்னூல்கள் ➡ https://bit.ly/parimaanam-books