பலதும் பத்தும் 6: உயிரினங்கள் அழிவு, ஒரு பிரபஞ்ச மோதல், நாசாவின் கலிகாலம்

தொலைந்துபோன 60% உயிரினங்கள்

சர்வதேச இயற்கை நிதியம் (The World Wide Fund for Nature) வெளியிட்டுள்ள அறிக்கை உலகின் உயிர்ப் பல்வகைமைக் கோலத்தைப் பற்றி மிகச் சோகமான விடயத்தை எமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

1970 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் முள்ளந்தண்டுள்ள உயிரினங்களில் 60%மானவை அழிந்துள்ளது, இதனைவிட மோசமாக கடல்வாழ் அங்கிகளின் நிலை இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 83%மன கடல்வாழ் உயிரினங்களை பூமி இழந்துள்ளது.

ஆபிரிக்க யானைகள்

இந்த அறிக்கையின் ஆரம்பமே மோசமாக இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவின் அதிகரிப்பு, உருகும் பனி மற்றும் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு என பல மீள முடியா ஆபத்துக்களின் எச்சரிக்கை மணியாக இந்த அறிக்கை இருக்கிறது.

இந்த நிலைக்கு காரணம் மனித நடவடிக்கைகளே என்பது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், பல விஞ்ஞானிகளின் கருத்துக் கூட. 2050 இல் மனிதனால் பாதிப்படையாத இடம் என்று பூமியில் வெறும் 10% பகுதி மட்டுமே இருக்குமாம்.

பிரபஞ்ச மோதலும் விண்மீன் பிறப்பும்

பிரபஞ்சத்தில் இருக்கும் பலரும் மிகச் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதால், அதில் இடம்பெறும் சந்திப்புகளும் மிகப் பெரிய மோதலாக மாறிவிடுகிறது. அண்ணளவாக 200 பில்லியன் விண்மீன்களைக் கொண்ட எமது விண்மீன் பேரடையான பால் வீதி கூட கடந்த காலத்தில் வேறு பல விண்மீன் பேரடைகளுடன் மோதுண்டு இருக்கலாம் என்று எமக்குத் தெரியும்.

பால்வீதி

தற்போது விண்ணியலாளர்கள் பால்வீதியின் உட்பகுதிக்கு விண்மீன்களைக் கொண்டுவந்து சேர்த்த ஒரு பாரிய மோதலைக் கண்டறிந்துள்ளனர்.

சுமாராக 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மோதலில் பால்வீதியின் உட்பகுதிக்குள் அதிகளவான விண்மீன்கள் வந்து சேர்ந்துதான் தற்போது பார்க்க பால்வீதியின் உட்பகுதி வீங்கியது போல தெரியக் காரணம் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறனர்.

இந்த மோதல் சிறிய மகிலன் முகில் அளவுள்ள இன்னொரு விண்மீன் பேரடையுடன் இடம்பெற்றிருக்கவேண்டும்.

கீழே உள்ள வீடியோவில் அந்த மோதல் எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று பாருங்கள்.

இந்த புதிய கண்டுபிடிப்பு நீண்ட நாட்களாக ‘ஏன் பால்வீதியின் உட்பகுதி வழமைக்கு அதிகமாக தடிப்பாக இருக்கிறது?’ என்கிற கேள்விக்கு விடையளிக்கிறது.

நாசாவின் கலிகாலம்

நாசாவுக்கு இது கலிகாலம் போல! கடந்த மாதத்தில் நாசாவின் புகழ்பெற்ற ஹபிள் தொலைநோக்கியின் பிரதான சுழல் காட்டி (gyroscope) செயலிழந்தது. ஹபிள் தொலைநோக்கி செயற்பட மூன்று சுழல் காடிகளை பயன்படுத்தும்.


ஹபிள் தொலைநோக்கி

சுழல் காட்டிகள் மூலமே தொலைநோக்கியை விண்வெளியின் தேவையான பக்கத்திற்கு திருப்புவதுடன், அதனை நிலையாக படங்கள் எடுப்பதற்கு ஏற்றவாறு வைத்திருக்க முடியும்.

ஹபிள் பயன்படுத்தும் மூன்று சுழல் காட்டிகளில் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் செயலிழந்தது. இதனால் ஹபிள் தனது நடவடிக்கைகளை நிறுத்தியது. தற்போது அதனை பூமியில் இருந்து சரிசெய்ய முடியாது என நாசா தெரிவித்துள்ளது.

ஹபிள் தன்னிடம் உள்ள பதிலீட்டு சுழல் காட்டிகளைக் கொண்டு தொடர்ந்து செயற்படும் என்பது மகிழ்ச்சியான செய்தி. நாசாவின் அடுத்த தலைமுறைக்கான விண்வெளித் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்ணுக்கு செலுத்தப்படும் வரையாவது ஹபிள் தொழிற்படவேண்டும் என்பது பல ஆர்வலர்களின் அவா.

இதேபோல கடந்த வாரத்தில் சிறுகோள் பட்டியை ஆய்வு செய்துகொண்டிருந்த Dawn விண்கலம் செயலிழந்தது. சிறுகோள் பட்டியில் இருக்கும் குறள்கோளான சீரிஸ்சை Dawn ஆய்வு செய்துகொண்டிருந்தது.

Dawn விண்கலம்

கடந்த வாரத்தில் திடீரென Dawn விண்கலத்தில் இருந்து பூமிக்கு வரும் சிக்னல் தடைப்பட்டது. தொடர்ந்து சிக்னலை ஏற்படுத்த எடுத்த முடிவுகள் பயனளிக்கவில்லை. Dawn விண்கலத்தின் அன்டனாக்களை பூமியின் பக்கத்திற்கு திருப்பத் தேவையான எரிபொருள் (hydrazine) முடிந்துவிட்டதே இதற்குக் காரணம் என்கிறது நாசா.

கடந்த வாரத்தில் பிறவிண்மீன் கோள்களை தேடும் கெப்ளர் விண்கலமும் இதேபோல செயலிழந்தது.

Dawn விண்கலம் சீரிஸை தற்போது சுற்றிவருகிறது. இன்னும் பல தசாப்தங்களுக்கு அது தொடர்ந்து அந்தக் குறள்கோளை சுற்றும். ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரிஸ் உடன் மோதும்.

சீரிஸ் பற்றி பல புதிர்களை எமக்கு Dawn கொடுத்துள்ளது. அது இதுவரை எமக்கு அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்யவே அடுத்த பல ஆண்டுகள் எடுக்கும். எனவே பல புதிய விடைகள் எமக்குக் கிடைக்கலாம்.

இன்னும் சில விடயங்கள்

ஈர்ப்புஅலைகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் கூறிய ஈர்ப்புஅலைகளை 2016 இல் LIGO விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு 2017 இல் நோபல் பரிசும் கிடைத்தது. ஆனால் தற்போது டென்மார்க்கில் இருக்கும் நீல்ஸ் போர் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த இரண்டரை வருடங்களாக LIGO தரவுகளை வைத்து செய்த சொந்தப் பரிசோதனையின் முடிவில் LIGO வின் கண்டுபிடிப்பு ஈர்ப்புஅலையாக இல்லாமல் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும் LIGO விஞ்ஞானிகள் அவர்களது ஆய்வின் முடிவில் உறுதியாக இருகின்றனர்.

சூரியனுக்கு மிக மிக அருகில்! நாசாவின் பார்கர் சூரிய ஆய்வி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விண்ணுக்கு ஏவப்பட்டது. சூரியனுக்கு மிக மிக அருகில் சென்று சூரியனை ஆய்வு செய்வதே இதன் நோக்கம்.

பார்கர் சூரிய ஆய்வி

கடந்த ஆக்டோபர் 29 இல் பார்கர் விண்கலம் சூரியனுக்கு வெறும் 47.2 மில்லியன் கிமீ தூர இடைவெளிக்கும் குறைவான தூரத்திற்கு வந்தது. இதுவரை மனிதன் அனுப்பி சூரியனுக்கு மிக மிக அருகில் சென்ற பொருள் என்கிற பெருமையை பார்கள் விண்கலம் பெறுகிறது.

சூரியனுக்கு இவ்வளவு அருகில் வர பார்க்கர் விண்கலம் மிக மிக வேகமாக பயணிக்கவேண்டியது அவசியம். சூரியனுக்கு சார்பாக ஹீலியோஸ் 2 விண்கலத்தின் அதிகூடிய வேகமான மணிக்கு 264,960 கிமீ என்கிற வேகத்தை விடக் கூடிய வேகத்தை பார்க்கர் விண்கலம் அடையும்.

இதேவேகத்தில் பயணித்தால் 2024 இல் சூரியனுக்கு 6.2 மில்லியன் கிமீ இடைவெளியில் சூயனைச் சுற்றும்.

#parimaanam #sciencepanda ⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக்கும் போட்டுவிட்டு போகவும்.😎😎

https://parimaanam.net
https://www.facebook.com/parimaanam
⚡ இலவச மின்னூல்கள் >>> https://bit.ly/parimaanam-books