காற்று மாசடைவது தொடர்பாக பெரும்பான்மையான மக்கள் உரிய கவனம் செலுத்தத் தவறிய காரணத்தினால் அதன் பாரதூரமான பின்விளைவுகளை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் மொத்த சிறார்களின் எண்ணிக்கையில் 93 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. சராசரியாக, 15 வயதிற்குட்பட்ட 1.8 பில்லியன் சிறுவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட 630 மில்லியன் சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றிலாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
காற்று மாசானது பொதுவாக திறந்த வெளிகளில் மட்டுமின்றி கட்டடங்களிற்குள்ளும் நிலவுகின்றது. இது காற்றில், 2.5 மைக்ரோ மீட்டர் அளவில் அல்லது அதைவிட சிறிய அளவில் உள்ள துணிக்கைகள் பரவிக் காணப்படும் செறிவிற்கு அமைவாகவே வரையறுக்கப்படுகின்றது. பொதுவாக சிறுவர்கள் உடலளவில் வளர்ச்சி நிலையில் இருப்பதால் அவர்கள் சுவாசிக்கும் வீதம் அதிகமாக இருப்பதோடு அவர்கள் தரைக்கு நெருக்கமாக இருக்கும் காரணத்தினால் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். காற்று மாசானது குறித்த பாதுகாப்பான அளவைத் தாண்டி அதிகரிக்கும் போது அது, ஆஸ்துமா, சுவாசக் குழாய்களில் வீக்கம், அதிகரித்த சுவாசப்பை செயற்ப்பாடு மற்றும் சுவாசப் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
உலகளாவிய ரீதியில் காற்றின் தரம் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தரவுகள் மூலம், 2016ம் ஆண்டில் மாத்திரம் 6 லட்சம் சிறார்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் சுவாசப் பாதைத் தொற்றுக்களால் உயிரிழந்துள்ளனர் என்னும் தகவல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் நாடுகளில் உள்ள 98 வீதமான 5 வயதிற்கு குறைந்த சிறார்கள் இப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதோடு உயர் வருமானம் பெரும் நாடுகளில் இது 52 வீதமாக உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் அவர்களின் நரம்பியல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள உடல் இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றது. மேலும் அவர்கள் வளர்ந்த பின்பும் புற்றுநோய்க்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் நிலவுகின்றன.
எனவே பெற்றோலிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதோடு மாற்றுச் சக்திமூலங்களின் பயன்பாட்டை இயலுமானவரை அதிகரித்து இப் பிரச்சினையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார தாபனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுதியது: பிரதீப் டாம்
⚡ #parimaanam #sciencepanda
⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://www.facebook.com/parimaanam
⚡ இலவச மின்னூல்கள் >>> https://bit.ly/parimaanam-books